புதுடெல்லி: பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 5 முதல் 12 வயது பிரிவினருக்கு செலுத்தவும், 6 முதல் 12 வயது பிரிவினருக்கு கோவாக்கின் தடுப்பூசி செலுத்தவும் இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நாட்டில் கடந்தாண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது, 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. 12-14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது கடந்த மார்ச் 16ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், 5 வயது முதல் 12 வயதினருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்துவதற்கான அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கக்கோரி பயாலஜிக்கல் இ நிறுவனமும், 6 முதல் 12 வயது வரையிலானவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதிக்கக் கோரி பாரத் பயோடெக் நிறுவனமும் விண்ணப்பித்து இருந்தன. மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பின் கொரோனா தொடர்பான நிபுணர் குழு இவற்றை ஆய்வு செய்து, இவற்றை பயன்படுத்த பரிந்துரை அளித்துள்ளது. இதன் அடிப்படையில், இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதோடு, இந்த தடுப்பூசிகளுடன் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி தடுப்பூசியையும் 28 நாட்கள் இடைவெளியில் கூடுதல் டோஸ் செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவிவித்தார்.* சீனாவில் 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைசீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், பரிசோதனை விரிவுப்படுத்தப்படுகிறது. தலைநகர் பீஜிங்கில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இங்குள்ள 2.1 கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தும்படி சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இங்குள்ள 11 மாவட்டங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இங்குள்ள சாயாங் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 35 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 32 பேருக்கு தொற்று உறுதியானது.* புதிதாக 1,347 பேர் பலிநேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் தொடர்பாக, ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:* புதிதாக 2,483 பேர் தொற்றால் பாதித்துள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,62,569 ஆக அதிகரித்துள்ளது.* அசாமில் விடுபட்டிருந்த 1,347 கொரோனா பலிகளும், கேரளாவில் விடுப்பட்ட 47 பலிகளையும் சேர்த்து, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,399 இறப்புக்கள் பதிவாகி உள்ளது. * நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 15,636 ஆக அதிகரித்துள்ளது.* கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பலி எதுவும் பதிவாகவில்லை. * முதல்வர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனைநாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஒன்றிய அரசு கவலை அடைந்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று, வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்துகிறார். நண்பகல் 12 மணிக்கு இது தொடங்குகிறது. இதில், ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மான்டவியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கையாக கட்டுப்பாடுகள் விதிப்பது, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது போன்றவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.