சென்னை பச்சையப்பாஸ் ஹாரிங்டன் கால்பந்து கிளப்பின் நிறுவனரான C.N.மூர்த்தி சென்ற வாரம் காலமானார். சென்னை கால்பந்திற்கு அளவிட முடியாத தொண்டுகளை ஆற்றியவர் இவர். அவருடனான நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் பத்திரிகையாளர் T.N.ரகு “ சென்னை கால்பந்தின் அரை நூற்றாண்டு கால வரலாற்றை தன் விரல் நுனியில் வைத்திருந்தவர் மூர்த்தி சார். சென்னை லீக் தொடர் முதல் இங்கு நடக்கும் ஒவ்வொரு கால்பந்து போட்டி பற்றிய அனைத்து விஷயங்களும் அவருக்குத் தெரிந்திருக்கும். மேலும் சென்னையில் கால்பந்து ஆடும் வீரர்களில் அவருக்கு தெரியாதவர்களே கிடையாது. எந்த வீரரைப் பற்றிக் கேட்டாலும் அந்த குறிப்பிட்ட வீரரின் ஆட்டமுறை தொடங்கி அவர் இந்த ஆட்டத்தில் இப்படி ஒரு கோலை அடித்தார் என்பது வரை வரிசையாகச் சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் நினைவில் வைத்திருப்பார்.
பழைய வீரர்கள் அனைவரையும் கவுரவிப்பது மூர்த்தி சார் தொடர்ந்து செய்து வந்த முக்கியமான பணிகளுள் ஒன்று. ICF, ரயில்வேஸ், ரிசர்வ் பேங்க் முதலிய பல அணிகளுக்காக ஆடிய ஓய்வு பெற்ற வயதான வீரர்கள் பலரையும், தன் பச்சையப்பாஸ் ஹாரிங்டன் கிளப்பிற்கு அழைத்து இளம் வீரர்களிடம் உரையாடச் செய்வார். அவ்வீரர்களின் சாதனை அவர்களுக்கேகூட மறந்து போயிருக்கும், ஆனாலும் அவர்களின் சிறப்புகளை வெளி உலகிற்கு கொண்டு செல்ல அயராது பணி செய்தார். பொங்கல் பண்டிகை நேரத்தில் இவர் தனியே ஒரு கால்பந்து தொடரை ஏற்பாடு செய்வார். அங்கு இவ்வீரர்களுக்கான கவுரவம் அரங்கேறும். தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகாவில் உள்ள, ஹைதராபாத்தில் உள்ள அனைத்து தமிழ் வீரர்கள் பற்றியும் இவருக்குத் தெரிந்திருக்கும். உள்ளூர் லீக் போட்டிகளைத் தாண்டி விட்டல் ட்ராபி என்ற தொடரில் மலேஷியாவில் இருந்துகூட அணிகள் வரும். அப்போட்டிகள் நடைபெறும் பழைய கார்ப்பரேஷன் மைதானத்திற்கு எப்போது சென்றாலும் அங்கு மூர்த்தி சார் நிச்சயம் உட்கார்ந்திருப்பார்.
சென்னை கால்பந்தைப் பற்றி எந்த ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் நான் மூர்த்தி சாரிடம் தான் செல்வேன். இதில் என்ன சிறப்பு என்றால், 70-களில், 80-களில் நடைபெற்ற போட்டிகளை கூட ஒரு திரைப்படம் பார்ப்பதற்கு இணையாக ஒவ்வொன்றையும் நுணுக்கமாக விளக்கிவிடுவார். லீக் போட்டிகளுக்கான மைதானத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் கைதாவதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் போராட்ட களத்திற்கு சென்று விடுவார்.
சென்னை கால்பந்து பற்றிய புள்ளிவிவரங்கள் இணையத்தில் அதிகமாக இருக்காது. கிரிக்கெட்டிற்கு cricinfo இருப்பதுபோல சென்னை கால்பந்திற்கு மூர்த்தி சார். உள்ளூர் போட்டிகள் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் நடக்கும் அனைத்து போட்டிகளையும் தவறவிடமாட்டார். நாகேஷ் என்ற முன்னாள் வீரர் ஒருவர் மெஸ்ஸியைப்போல ஆடுவார் என்று சொல்வார் மூர்த்தி சார். நாகேஷ் மற்றும் மெஸ்ஸி இருவரது ஆட்டத்தையும் பார்த்துள்ள அவரின் இந்தக் கூற்று நிச்சயம் மிகையானதாக இருக்காது. அவரின் மறைவு சென்னை கால்பந்திற்கு மிகப்பெரிய இழப்பு” என வேதனையுடன் கூறினார்.