கால் வைக்கும் முன்பே கைப்பற்ற நினைக்கும் மாமன்னர் அலெக்ஸ்சாண்டர் போல, இன்றைக்கு மல்டிவெர்ஸ் எல்லாவற்றையும் சேர்த்தாலும் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபரான எலான் மஸ்க்கின் ஆளுகை விரிவடைந்து கொண்டே போகிறது. தற்போது அவர் கைகளில் வந்தமர்ந்திருக்கும் பறவை ட்விட்டர்.
2006-ல் தொடங்கப்பட்ட முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரின் 100 சதவிகித பங்குகளை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கவுள்ளார் எலான் மஸ்க். 54.20 டாலர் ஒரு பங்கின் விலையாக பங்குதாரர்களுக்கு கிடைக்கும். ஏப்ரல் 1 அன்று சந்தையில் விற்பனையான விலையை விட இது 38 சதவிகிதம் அதிகம்.
ட்விட்டரில் அதிகபட்சமாக பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பவர்களில் ஒருவரான எலான் மஸ்க் முன்வைக்கும் குற்றச்சாட்டே ட்விட்டரில் கருத்துகளுக்கான சுதந்திரம் இல்லை என்பதுதான். அவரை பின்தொடர்பவர்களும் அதனை ஆமோதிக்கவே ட்விட்டரை வாங்கி அந்தக் குறைகளை நீக்கவுள்ளார் எலான்.
சுவாரஸ்யமான இன்னொரு செய்தியும் இதில் இருக்கிறது. அதிக முறை ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் எலான் மஸ்க் ட்விட்டர் பக்கமும் அடக்கம். கொரோனா தொடர்பாக பதிவிட்ட போது அதனை ட்விட்டர் நீக்கியது. இப்படியாக ட்விட்டருக்கும் எலானுக்குமான உறவு பகையும் முரணும் சேர்ந்ததே. அவற்றையெல்லாம் ட்விட்டரை வாங்கி சரி செய்து கொள்வோம் என முடிவு செய்துவிட்டார் எலான். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்கை நிர்வாகக் குழுவுக்கு அழைத்தார் ட்விட்டரின் சிஇஓ பராக் அகர்வால். எலான் மறுத்துவிட்டார். ஆனால், இப்போது 100 சதவிகிதத்தை எலான் வாங்கியிருக்கும் நிலையில், நிலைமை தலைகீழ்!
இனி ட்விட்டரில் வர இருக்கும் மாற்றங்கள் குறித்து நெட்டிசன்கள் ஆர்வத்தோடு பதிவிட்டு வருகிறார்கள். ஏற்கெனவே சில பகுதிகள் மட்டும் ஓப்பன் சோர்ஸ் எனப்படும் எளிதாக அணுகக்கூடிய மென்பொருளாக இருக்கும் நிலையில் ட்விட்டர் இனி முழுக்கவே ஓப்பன் சோர்ஸாக மாறவுள்ளது. Spambots எனப்படும் மூட்டை பூச்சிக்களை நசுக்குவதே எலானின் அடுத்த கடமையாக இருக்கப்போகிறது. உள்ளேயும் வெளியேயும் திறந்த புத்தகமாக ‘கருத்துக்களைச் சுதந்திரமாக முன்வைப்பதற்கான களமாக’, குறிப்பாக ட்வீட்டை எடிட் செய்யும் வசதியைக் கொண்டு வர இருக்கிறார் எலான்.
ட்விட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டார்ஸி, “ட்விட்டர் பொது உடமை ஆக இருப்பதே சரி. ஒருவர் உரிமை கொள்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் இன்றைக்கு ட்விட்டர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ஒற்றைத் தீர்வாக நான் பார்ப்பது எலானைதான். சமூக மனநிலையை முன்வைக்கும் அவரது மிஷனில் நான் நம்பிக்கை கொள்கிறேன்” என்று ட்விட் செய்துள்ளார்.
இனி எலான் பதிவிடும் ட்வீட்டை யாராலும் நீக்க முடியாது என்பது மட்டும் தெரிகிறது.