ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு…
வறட்சியும் விஷத்தன்மை மிக்க தேள் முதலிய உயிரினங்களும் நிறைந்த பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் சிறு குழு ஒன்று பரந்த விரிந்த குன்றுகளுக்கு நடுவே மேய்ச்சலுக்கான இடம் தேடி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். வெப்பம் தாள முடியாத அளவுக்கு வாட்ட, காற்று வீசாதா என ஏக்கத்தோடு பார்க்கும் மக்களின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறுமைதான் தென்படுகிறது. யாரும் எதிர்பாராத வேளையில் பேய் காற்று வீசத் தொடங்குகிறது. பாறைகளை மூடிய பழுப்பு நிற மண்துகள்களை வாரி சுருட்டி காற்று, சூறாவளியாக மாறுகிறது.
காற்று ஓயும் வேளையில் மக்கள் தங்கள் கண்களுக்கு முன் தெரிவதைக் குழப்பத்தோடு பார்க்கிறார்கள். மணற்பரப்பில் பாறை முகடுகளில் மஞ்சள் நிறத்தில் மின்னுகிறது அந்தப் பொருள். அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை, அடுத்த ஈராயிரம் ஆண்டுகாலத்திற்கு நடக்கவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அதுதான் தீர்மானிக்கப் போகிறது என்று!
கோலார் நகரை ஆண்ட மன்னர்கள்
கோலார் என்று இன்று அழைக்கப்படும் குவலாளபுரம் – சோழப் பேரரசின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழ் மன்னர்களான கீழை கங்கர்களால் ஆட்சி செய்யப்பட்டது. கீழை கங்கர்கள் சமண மதத்தை பின்பற்றுபவர்கள். சரவணபெலகுளா இவர்கள் காலத்தில்தான் கட்டப்பட்டது. கோலாரையும் தலக்காட்டையும் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். அதன் பிறகு 10-ம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த சோழர்கள் இங்கு பல கோயில்களை நிர்மாணித்தனர். சோமநாத ஈஸ்வர கோயில், கோலாரம்மா கோயில் உள்ளிட்டவை இவர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. கோலாரம்மா கோயிலின் கடவுள் துர்க்கை. இங்கு இருக்கிற உண்டியல், நிலத்தில் சிறிய துளை அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதனை கிணறு எனவும் அழைக்கிறார்கள். இங்கு வருபவர்கள் நாணயங்களைக் கட்டாயம் காணிக்கையாக இட்டுச் செல்ல வேண்டும். மைசூர் மன்னர்கள் தவறாது இந்த கோயிலுக்கு வழிபட வந்ததாக வரலாறு கூறுகிறது.
ஆங்கிலேய ஆட்சியில்…
சோழர்களை வெற்றி கொண்டு அரியணைக்கு வருகிறான் ஹோய்சாளப் பேரரசு மன்னன் விஷ்ணுவர்தன். விஜயநகர பேரரசு, மாரத்தியர்கள் என தென் கர்நாடகாவின் எல்லையை ஆண்டவர்கள் வரிசை திப்பு சுல்தானோடு முடிவுக்கு வருகிறது. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கொல்லப்பட்ட திப்புவின் ராஜ்ஜியத்தை மைசூர் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயே கம்பெனி கோலார் பகுதியை மட்டும் தன்னுடைய ஆய்வுக்கு வைத்து கொண்டது.
1799 சர்வே பணிக்காக செல்லும் லெப்டினென்ட் வாரன் கோலாரில் தங்கம் கிடைப்பதை மக்கள் வழியாக அறிந்து கொள்கிறார். சோழர் காலத்தில் மக்கள் கைகளாலேயே தங்கத்தை சலித்த கதைகளைக் கேட்கிறார். தங்கம் இருப்பதற்கான தடயத்தைக் கொண்டு வருபவர்களுக்குச் சன்மானம் என அறிவிக்கிறார். சில கிராம மக்கள் வண்டி கட்டிக் கொண்டு மணலை அள்ளி வந்து காண்பிக்கின்றனர். மஞ்சள் துகள்கள் மின்னுகின்றன.
“இந்த மக்கள் நம்புவது போல கொஞ்ச நிலப்பரப்பில்தான் தங்கம் கிடைக்கிறது என்பதை நாமும் நம்ப போகிறோமா? தங்கத்தின் நரம்புகள் நிலத்தடியில் மாரிக்குப்பம் பகுதியையும் தாண்டி ஏன் இருக்க முடியாது?” என வாரன் எழுதுகிறார். 1804 தொடங்கி 1860 வரை பல்வேறு ஆய்வுகள், சல்லடைகள் எனச் சலித்த போதும் முயற்சி கைகூடவில்லை. 1859 சுரங்கத்திற்காக நிலத்திற்கு அடியில் தோண்டுவதை அரசு தடை செய்கிறது.
தனிமனிதனின் தங்கக் கனவு
1871-ல் ஆசியாட்டிக் ஜர்னல் பத்திரிகையில் 1804 வாரன் எழுதியதை வாசித்த ஐரிஷ் அதிகாரி மைக்கேல் பிட்ஜெரால்ட் லாவலே கள ஆய்வு செய்ய கிளம்புகிறார். ஏற்கெனவே தனக்கு இருந்த நியூசிலாந்து தங்க சுரங்க அறிவின் மீது நம்பிக்கை வைத்து 60 மைல் தூரத்திற்கு மாட்டு வண்டியில் சென்று கள ஆய்வு செய்ததில் தங்கம் கிடைக்கக் கூடிய இடங்கள் எனச் சிலவற்றை பட்டியலிடுகிறார். இரண்டு வருடங்களுக்கு பிறகு 1873-ல் மகாராஜாவிடம் சுரங்க பணிகள் மேற்கொள்ள அனுமதி கேட்டு கடிதம் அனுப்புகிறார். “இந்த முயற்சியில் ஜெயிச்சா அரசுக்கு விலை மதிக்க முடியாத மதிப்பு கிடைக்கும். தோற்றால் எனக்கு உதவி செய்தீர்கள் என்பதை தவிர நட்டம் எதுவுமில்லை” என அனுப்பிய கடிதத்திற்குப் பதிலாக 20 ஆண்டுகள் லீஸ் கிடைக்கிறது.
கார்னிஷ் வித்தைக்காரர்கள்
தனது பொருளாதார வளங்களுக்கு உட்பட்டு பணிக்கு ஆட்களை அமர்த்தி வேலையைத் தொடங்குகிறார் லாவலே. லாவலேவின் கதையை நாவலாக எழுதுகிறார் FE பென்னி. இந்த நாவல் தனிமனிதனின் தங்க கனவு என பலராலும் பேசப்பட, உயர்மட்ட அதிகாரிகள் லாவலே உடன் கைகோர்க்கிறார்கள். 1877-ல் ஒருவர் கண்ட கனவு ஐந்து பேர் அளவுக்கு விரிவடைகிறது. அவர்களில் கார்னிஷ் சுரங்கக்காரர்களும் அடக்கம். இங்கிலாந்தின் தென்மேற்கு கோடியில் அமைந்திருக்கும் பகுதியே கார்ன்வால். செல்டிக் கடல் நகரத்திற்கும் KGF-க்கும் ஆன தொடர்பு அப்போது ஆரம்பித்தது. 19 மற்றும் 20 நூற்றாண்டுகளில் உலகம் முழுக்க பிரபலமான பல சுரங்கங்களில் பணியாற்றியவர்கள் கார்னிஷ் மக்கள். திட்டமிடுவதில் வல்லமை, நேர்த்தியான தொழில்நுட்ப அறிவும் கொண்ட கார்னிஷ் வல்லுநர்கள் KGF-ல் பின்பு பல்வேறு பதவிகளை வகித்தனர்.
மூன்று பணிநிலைகள் இங்கு உண்டு. அதிகாரிகள் ஆங்கிலேயர்களாகவும், மேலாளர்கள்/கண்காணிப்பாளர்களாக ஆங்கிலோ இந்தியர்களும், தொழிலாளர்களாக இந்திய மக்களாகவும் இருந்தனர். கர்நாடக மக்கள் பணிக்கு வர பயந்ததால் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து ஆட்களை வேலைக்கு அழைத்து சென்றனர். 1880 முதல் ஜான் டெய்லர் அன்ட் சன்ஸ் நிறுவனம் KGF-ஐ நிர்வகிக்கத் தொடங்குகிறது.
சுரங்கம் அல்ல பொக்கிஷம்
1881 முதல் 1890 பத்தாண்டுகளில் 750 கிலோ தங்கம் பெறப்பட்டது. படிப்படியாக 1890-1900 பத்தாண்டுகளில் தங்கத்தின் அளவு 8960 கிலோவாகவும் 1910களில் 17,080 கிலோவாகவும் அதிகரித்தது. சராசரியாக ஆண்டுக்கு பெறப்படும் தங்கம் 11700 கிலோ முதல் 12550 கிலோ வரை கிடைத்து கொண்டிருந்தது. 1930களில் 73 மில்லியன் யூரோ வருமானத்தை எட்டி கொடுத்தது. அரசுக்கு வரியாக கட்டி வந்த தொகையும் பெரிது இல்லை. மொத்த உற்பத்தியில் 5 சதவிகிதம் மட்டுமே. நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 22 மடங்கு திருப்பி கொடுக்கும் அளவுக்கு லாபம் இருந்தது. பத்துக்கு மேற்பட்ட சுரங்கங்கள் இங்கு செயல்பட்டன. 3000 அடி ஆழம் கொண்ட சுரங்கங்கள் கூட இங்கு உண்டு.
முதல் மின்-ஆற்றல் நிலையம்
டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வருவதற்கு முன்பே கோலாருக்கு மின்சாரம் வந்துவிட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மின்சார வழித்தடம் இங்குதான் அமைக்கப்பட்டது. சிவசமுத்ரம் நீர்ப்பரப்பில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு 140 கிமீ கடந்து KGFக்கு வருகை தந்தது. அசுரத்தனமாக வளர்ந்த KGF தங்கம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. இந்தியாவின் 95 சதவிகித உற்பத்தி KGF வழியாக நடைபெற்றது. இங்கு 30,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
காலனியத்துவம்
மினி இங்கிலாந்து என கோலார் டவுன்ஷிப் அழைக்கப்பட்டது. அதற்கு காரணம் இங்கிருந்த வசதிகள். ஆங்கிலேய அதிகாரிகளுக்கு தாரளாமான வீடுகள், அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம், ஓய்வறைகள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், மருத்துவமனைகள் என தங்கம் வசதிகளைக் கொண்டு வந்து சேர்க்கத் தொழிலாளர்களின் குடிசைகளிலோ தூசும் எலிகளும் மட்டுமே நிரம்பி இருந்தன. ஒரே ஆறுதல் மருத்துவ வசதி மட்டும் தொழிலாளர்களுக்கு உரிய முறையில் கிடைத்தது.
வருடத்திற்கு 50,000 எலிகளையாவது தொழிலாளர்கள் கொன்றிருப்பார்கள். இந்த நிலை இந்திய அரசு விடுதலைக்கு பிறகும் பெரிதாக மாறவில்லை எனப் போராடி வந்தார்கள் தொழிலாளர்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு மைசூர் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிறுவனத்தை, 1956-ல் மத்திய அரசு தன்வயப்படுத்தியது. பொதுத்துறை கீழ் இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் உற்பத்தி செலவு போக எதுவும் மிஞ்சுவது இல்லை என 2001-ல் இதை கைவிடுவதாக அரசு முடிவு செய்தது.
ரத்த வரலாறு
இடிபாடுகளுக்கு இடையே சிக்குபவர்கள், நோய்வாய்ப்படுபவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கில் மக்கள் இங்கு பலியானார்கள். மக்கள் மட்டுமல்ல அதிகாரிகளும். கார்னீஷ் அதிகாரி ஒருவர் பற்றிய கதையை தி ரோவன் ட்ரீ இணையத்தளம் தெரிவிக்கிறது. 1923-ல் வில்லியம் பெல்மியர் என்கிற கார்னீஷ் அதிகாரி அங்கு பணியாற்றிய போது அவரது பிரிவில் இருந்த சிலர் வெடி வைத்து பாறைகளைத் தகர்க்கும் போது இறந்துவிடுகின்றனர். இதனை ஏர் பிளாஸ்ட் என்கிறார்கள்.
ஆழமாக கீழிறங்கும் ஷேஃப்ட் வழியாக சென்று கிடைமட்டமாக செல்லும் டனல் வழியாக ஊர்ந்து கொண்டே தொழிலாளர்கள் சென்று பாறைகளை அகற்ற வேண்டும். இந்தப் பணியில் விபத்துக்கு வாய்ப்பு அதிகம். இதனால் மனம் பாதிக்கப்பட்ட வில்லியம் மீண்டும் கார்ன்வால்க்குத் திரும்பிச் செல்கிறார். மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகும் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. ஒரு நாள் அவர் வீட்டில் இருந்து காணாமல் போகிறார். அவர் போகும் வழியை பார்த்த பக்கத்துவீட்டுக்காரர் வில்லியம்மின் சகோதரர்கள் உடன் இணைந்து வில்லியம்மைத் தேடுகின்றனர். வீட்டுக்கு அருகே இருக்கிற கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றின் பலகையில் அவரது கோட் தொங்கி கொண்டிருந்தது. இப்படியான பல கதைகளை KGF சுற்றி சொல்லிவிட முடியும்.
மீண்டும் சுரங்கத்தை திறக்க வேண்டும் எனத் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தங்க சுரங்கம் மீண்டும் திறக்கப்படும் என 2014-ல் அறிவித்தனர். அந்தப் பகுதியில் தொழில் நிறுவனங்களை அமைக்க கர்நாடக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கோலார் தங்கச் சுரங்கம் செயல்பட்டு கொண்டிருந்த காலத்தில் பாபா அணு ஆராய்ச்சி கூடமும் இங்கு செயல்பட்டது.
இப்போது மீண்டும் கோலாரை பற்றிப் பேசக் காரணம் KGF படங்கள் தான். படத்தின் களம் KGF-ஐ மையமாக கொண்டது. கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் ஓடி இளைப்பாறி உள்ள தொழிற்சாலை. 1000 டன்கள் தங்கத்தை மனிதர்களுக்கு அளித்திருக்கும் பொக்கிஷம். அவற்றில் பாதி இங்கிலாந்துக்கு மட்டுமே சென்றிருக்கும். இன்னும் ஆயிரக்கணக்கான டன்கள் மண்ணில் கூட இருக்கலாம். உள்ளே வளங்கள் இருந்தும் ஓர் இறந்த நகரமாக காட்சியளிக்கிறது இன்றைய KGF.