சியோல் : ”வடகொரியாவுக்கு எதிராக வாலாட்டுவோர் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும்,” என, அந்நாட்டு அதிபர் கிம் ஜங் உன் எச்சரித்துள்ளார்.
கிழக்காசிய நாடான வட கொரியாவில், ராணுவத்தின் 90வது ஆண்டு விழா, அந்நாட்டு அதிபர் கிம் ஜங் உன் தலைமையில் விமரிசையாக நடந்தது. தலைநகர் பியாங்யாங் சதுக்கத்தில் நடந்த இந்த விழாவில், வட கொரியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் கண்டம் விட்டு கண்டம் தாவும் ‘ஹவாசாங்-17’ ஏவுகணை உள்ளிட்ட நவீன போர் ஆயுதங்களின் அணிவகுப்பு நடந்தது.
அவற்றை பார்வையிட்ட பின் கிம் ஜங் உன் பேசியதாவது:
நம் நாட்டின் அணு ஆயுத திறனை அதிகபட்ச வேகத்தில் மேம்படுத்தி, படைகளை வலிமைப்படுத்துவோம். போரை தவிர்ப்பதே அணு ஆயுதங்களின் அடிப்படை நோக்கமாகும். ஆனால் நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டால், அணு ஆயுதப் படைகளால் போரை தவிர்க்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
வட கொரியா, அமெரிக்காவின் பொருளாதார தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தடைகளை தளர்த்த வேண்டும் என்பதற்காக, அமெரிக்கா ஆதரிக்கும் தென் கொரியா, ஜப்பான் நாடுகளை மிரட்ட, தொடர்ந்து அதி நவீன ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தி வருகிறது.
Advertisement