வாஷிங்டன்: இந்தியாவில் முதலீடு செய்யுமாறு செமிகண்டக்டர் தயாரிப்பில் ஈடுபடும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்திய நிதி அமைச்சர்நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியாவில் முதலீட்டு வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசி வருகிறார். சென்ற வாரம் ஃபெடக்ஸ், மாஸ்டர்கார்டு ஆகிய நிறுவனங்களில் சிஇஓ-க்களை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் செமிகண்டக்டர் தயாரிப்பில் ஈடுபடும் அமெரிக்க நிறுவனங்களின் அதிகாரிகளை அவர் சந்தித்தார்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா செமிகண்டக்டர் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருவதால் இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
சமீப காலமாக உலக அளவில் செமிகண்டக்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் செமிகண்டக்டர் தேவைக்கு இறக்குமதியை சார்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவிலேயே செமிகண்டக்டர் தயாரிப்புக்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்க சென்ற ஆண்டு ரூ.76 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தது.
ஊபர் நிறுவனத்தின் சிஇஓ தாரா கோஸ்ரோவ் ஷாஹியையும் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் சிஇஓ மார்க் விட்மாரையும் சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.