கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் எஸ்.கே.ஸ்ரீனிவாசன் கொலை தொடர்பாக சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவை (எஸ்டிபிஐ) சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கொலை தொடர்பான விசாரணையை கண்காணிக்கும் கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜய் சாக்ரே, கைது செய்யப்பட்ட அனைவரும் நேரடியாக குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அவர்கள் பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அப்துல் ரஹ்மான், ஃபிரோஸ், பாசித் மற்றும் ரிஷில் ஆகிய 4 பேரையும் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
இது தொடர்பாக பேசிய விஜய் சாக்ரே, “பாசித் மற்றும் ரிஷில் ஆர்எஸ்எஸ் தலைவர்களில் முக்கியமானவர்களின் பட்டியலை தயாரித்தனர், பின்னர் ஸ்ரீனிவாசனை கொலை செய்தனர். மூன்று ஸ்கூட்டர்களில் ஆட்களும், ஆயுதங்களை ஏந்திய ஒரு சிவப்பு காரும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து இந்த கொலையை செய்தனர். இந்த கொலை தொடர்பாக எஸ்டிபிஐ அலுவலகங்கள் மற்றும் பல தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. நாங்கள் அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வோம்” என்று கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில், பாலக்காடு மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு அரசியல் கொலைகள் நடந்துள்ளன. எஸ்டிபிஐ தலைவர் சுபைர் ஏப்ரல் 15 அன்று வெட்டிக் கொல்லப்பட்டார், அடுத்த நாள் ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீனிவாசன் அதற்கு பதிலடித் தாக்குதலில் கொல்லப்பட்டார். சுபைர் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று ஆர்எஸ்எஸ் தொண்டர்களை காவல்துறை ஏற்கனவே கைது செய்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM