முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டுமென முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி மனு அளித்திருந்தார். கடந்த 19ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் புகார் ஆகியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் கூறியிருந்த நிலையில், ஆணையத்தில் புகழேந்தி ஆஜரானார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 156 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. சசிகலா தரப்பு, அப்போலோ மருத்துவமனை தரப்பு விசாரணைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கையை விரைவில் தயார் செய்து தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தர். அப்போது அவர் கூறியதாவது, ஜெயலலிதா இயற்கையாகவே, நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சசிகலாவை பழிவாங்க வேண்டும் உள்ளிட்ட அரசியல் ஆதாயங்களுக்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளித்தார். அரசியல் ஆதாயத்திற்காக ஆறுமுகசாமி ஆணையம் கொண்டுவரப்பட்டது. அவரால் கொண்டுவரப்பட்ட ஆணையம், அவரையும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.