ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுடன், குறுக்கு நோக்கத்துடன் செயல்படுவதாக, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்த டாக்டர்
தமிழிசை சவுந்தரராஜன்
, கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற தொடக்கத்தில், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கு இடையே சுமுகமான உறவு இருந்தது. பிறகு, பல்வேறு விவகாரங்களில், ஆளுநருக்கும், ஆளும் அரசுக்கும் இடையே முட்டல் மோதல் நிலவியது.
ஈ.எஸ்.எல்.நரசிம்மன் ஆளுநராக இருந்த போது ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் முதலமைச்சர் கே.சந்திசேகர் ராவ் தவறாமல் கலந்து கொள்வார். ஆனால், தற்போது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் மோதல் நிலவுவதால், அங்கு நடைபெறும் விழாக்களை, கே.சந்திசேகர் ராவ் புறக்கணிப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநர் மாளிகையின் வெளியே மீண்டும் புகார் பெட்டியை வைத்து அதில் மாநில நிர்வாகம் குறித்த புகார்களை போடலாம் என ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார். இதனால், முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. “ஆளுநர் வேலையை செய்யாமல் பாஜக தலைவர் போல் தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார்” என, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தொடங்கி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிகழ்ச்சியில் பேசிய, அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவ் பேசியதாவது:
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுடன், குறுக்கு நோக்கத்துடன் ஆளுநர்கள் செயல்படுகின்றனர். தமிழகத்தில், நீட் தேர்வு விலக்கு மசோதா, பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா என, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில், ஆளுநர்களின் ஒப்புதலுக்காக, முக்கிய மசோதாக்கள் காத்துக் கிடக்கின்றன. இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், ஆளுநர் ஆட்சி முறை குறித்தும், கே.சந்திரசேகர் ராவ் கடும் அதிருப்தி தெரிவித்தார். குறுக்கு நோக்கத்துடன் ஆளுநர்கள் செயல்படுவதாக, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மறைமுகமாக சாடி உள்ளார். விரைவில், ஆளுநர் தமிழிசைக்கு செக் வைக்கும் வகையில், பல அதிரடி நடவடிக்கைகளை தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.