'இது தான் சரியான நேரம்!' – ஸ்கெட்ச் போட்டு களமிறங்கும் கேசிஆர்!

தேசிய அரசியலில் களமிறங்குவதற்கான சரியான தருணம் இது என, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்து உள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில், முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான
தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி
ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தொடங்கி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடாடும் வகையில், தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஐதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில், இன்று அக்கட்சி சார்பில் விழா நடைபெற்றது. இதில், அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், அங்கு கூடியிருந்த தொண்டரகளிடையே பேசியதாவது:

ஒருசில சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்னிடம் வந்து, டிஆர்எஸ் (தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி) கட்சியை பிஆர்எஸ் (தேசிய ராஷ்ட்ரீய சமிதி) கட்சியாக மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டதாகத் தெரிவித்தனர். கடந்த காலத்தில் தேசிய அரசியலில் நிறைய மூன்றாவது கூட்டணிகள் இருந்தன. எனினும் அவை அதிக பலனை தரவில்லை. அரசியல் கட்சிகள் ஒன்றிணைவது பற்றி நான் பேசவில்லை. நான் எந்த முன்னணியை அமைக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் மக்கள் முன்னணியை அமைக்கிறேன். எங்களது ஒரே நோக்கம், புதிய ஒருங்கிணைந்த விவசாய மற்றும் தொழில் கொள்கை தேவை என்பதே.

எங்களுக்குத் தேவை மக்கள் ஆதரவு தவிர, இரண்டு மூன்று முதல்வர்கள் ஒன்று கூடும் கூட்டணி அல்ல. 21 ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா பற்றிப் பேசிய போது மக்கள் சந்தேகப்பட்டார்கள். அவர்கள் எங்களைக் கேலி செய்தார்கள். இப்போது நாம் எந்த நிலையில் எப்படி இருக்கிறோம் என்று பாருங்கள். சொல்பவர்கள் நாங்கள் அல்ல. தெலங்கானா மாநிலத்திற்காக செய்ததை தற்போது தேசத்திற்காகவும் செய்ய விரும்புகிறோம்.

பெங்களூரில் 30 லட்சம் பேர் தகவல் தொழில்நுட்பத் துறைகள் போன்றவற்றில் வேலை செய்கிறார்கள். ஆனால் கர்நாடகாவில் நீங்கள் என்ன உடுத்துகிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கொரோனா நெருக்கடி காலத்திலும் கூட, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, மாநில மக்களுக்கு வழங்கப்படுவது போல், ரேஷன் பொருட்கள் வழங்கினோம். அவர்கள் வீட்டிற்குச் செல்ல போக்குவரத்து ஏற்பாடு செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், கடந்த சில ஆண்டுகளாக, தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். பாஜகவுக்கு மாற்றாக, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை முன்னிறுத்த அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக, தலைநகர் டெல்லியில், பிரம்மாண்டான கட்சி அலுவலகத்தை அவர் கட்டி வருகிறார். பாஜகவை வீழ்த்த தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் அவர் ஒப்பந்தமும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.