புது டெல்லி: இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் ட்விட்டர் குறுக்கிட்டால் என்ன மாதிரியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறித்து எலான் மஸ்கிற்கு ட்வீட் மூலம் எச்சரித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் தளத்தை கையகப்படுத்துகிறார். இந்த செய்தி உலக அளவில் பேசு பொருளாகி உள்ளது. அதற்கு ட்விட்டரின் இயக்கம் இனி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பே முக்கியக் காரணம். ஏனெனில் தன்னை பேச்சு சுதந்திர விரும்பி என சொல்லி வருகிறார் மஸ்க். அதனால் ட்விட்டரில் வெறுப்புப் பேச்சு அதிகரிக்குமோ எனவும் கவலை கொண்டிருந்தனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
இந்நிலையில், மஸ்கை ட்வீட் மூலம் எச்சரித்துள்ளார் சசி தரூர். “எந்த சமூக வலைதள நிறுவனம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து எங்களுக்கு எந்தவித அக்கறையும் இல்லை. முக்கியமல்ல. விஷயம் என்னவென்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படிச் செய்கிறார்கள் என்பதே எங்களுக்கு முக்கியம். ட்விட்டர் தளம் இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் குறுக்கிட்டாலோ அல்லது அதற்கு நேர் எதிராக எங்களது சூழலில் வெறுப்புப் பேச்சு மற்றும் வசை பாட அனுமதி கொடுத்தாலோ, பின்னர் ஐடி ஆணையக் குழு நடவடிக்கை எடுக்கும்” என சொல்லியுள்ளார் சசி தரூர். இதில் மஸ்கையும் டேக் செய்துள்ளார் அவர்.
“பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயக செயல்பாட்டின் அடித்தளமாகும். மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு இன்றியமையாத பல விஷயங்கள் விவாதிக்கப்படும் தளமாக ட்விட்டர் உள்ளது. அதனால் முன்பை காட்டிலும் ட்விட்டரை சிறந்ததாக மாற்ற விரும்புகிறேன். புதிய அம்சங்கள் கொண்டுவரப்படும். அதன் மூலம் ட்விட்டர் மேம்படுத்தப்படும். ட்விட்டருக்கு மிகப்பெரிய சக்தி உள்ளது. இந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்” என தெரிவித்திருந்தார் மஸ்க். பின்னர் சட்டதிட்டங்களுக்கு பொருந்தும் வகையில் பேச்சு சுதந்திரம் இருக்கும் எனவும் சொல்லியிருந்தார்.