புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் IN 2c ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து, சந்தையில் விற்பனை மேற்கொண்டு வருகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். மலிவு விலையில் கீபோர்டு (Feature) போன்களை உற்பத்தி செய்து கவனம் ஈர்த்த நிறுவனம். கால ஓட்டத்தில் சீன நிறுவன ஆதிக்கத்தால் சந்தை வாய்ப்பை கொஞ்சம் இழந்தது. இருந்தும் தொடர்ச்சியாக அவ்வப்போது புதிய மாடல் போன்களை மைக்ரோமேக்ஸ் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது ‘இன்’ சீரிஸ் மாடல் போன் வரிசையில் இன் 2c என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோமேக்ஸ். இந்த போன் வரும் மே 1-ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை & சிறப்பு அம்சங்கள்: 6.52 இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், யுனிசோக் T610 சிப், 3ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி ஆகியன உள்ளது. பின்பக்கத்தில் இரண்டு கேமராவும் இடம் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் உள்ளது. 5000 mAh பேட்டரி, 4ஜி இணைப்பு வசதி, டைப் சி சார்ஜிங் போர்ட், 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வசதியும் உள்ளது.
இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் எனத் தெரிகிறது. இதன் விலை 8,499 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அறிமுக சலுகையாக 1000 ரூபாய் வரை விலையில் தள்ளுபடி இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.