புதுடெல்லி:
டெல்லியில் ரைசினா சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் போலந்து, ஸ்லோவேனியா உள்ளிட்ட 90 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஜனநாயக மறுபரிசீலனை, பருவநிலை மாற்றத்தை கையாளுதல் உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்த மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சியில் ரஷியா உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பேச்சு எழுந்தது. அப்போது பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:-
கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது என்பது அனைவருக்குமே தெரியும். அந்நாட்டு மக்கள் என்ன பாடுபட்டனர் என்பதை நாம் யாரும் மறக்கவில்லை. அதைப் போலத்தான் தற்போதைய உக்ரைன் நிலையும் இருக்கிறது. இது ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு அறைகூவலாக கூட இருக்கலாம். ஆசியாவில் – ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் – நெருக்கடியை எதிர்கொண்ட போது ஐரோப்பிய நாடுகள் எங்கே போயிருந்தன?
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. போரை நிறுத்திவிட்டு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம். உக்ரைனில் நடந்து வரும்போரை உடனடியாக நிறுத்துவதற்கான வழிமுறைகளைதான் நாம் காண வேண்டும். போரை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் தர வேண்டும்.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவை குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுக்கவைக்க மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுத்தன. இருப்பினும் இந்தியா இருபக்கமும் சாரா நிலையை எடுத்தது.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியர்கள் யார் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். உலகை மகிழ்விப்பதை விட, நாம் யார் என்று தெரிந்துகொண்டு, நமது கொள்கை அடிப்படையில் உலகை அணுகுவது நல்லது.
மற்றவர்கள் எங்களை எப்படி வரையறுக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நாம் பிற நாடுகளின் தரப்பிலிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற எண்ணத்தை விலக்க வேண்டும். இந்தியா கடந்த 75 ஆண்டுகளாக உலகின் பெரும் ஜனநாயக நாடாக நிகழ்ந்து வருகிறது. உலகிற்கு நாம் ஏற்படுத்திய வித்தியாசம் என்பது ஜனநாயகமே ஆகும்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.