புதுடெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய அரசின் கீழ் 1,200 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீடு (10 மாணவர்கள்) உட்பட பல்வேறு சிறப்பு ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் சேர்க்கை நடந்து வந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டி படைத்து வரும் கொரோனா தொற்றால் ஏராளமான குழந்தைகள் தங்களின் பெற்றோரை இழந்து, ஆதரவற்றவர்களாகி உள்ளனர். இவ்வாறு உள்ள குழந்தைகளை பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ், இந்த பள்ளிகளில் சேர்க்க ஒன்றிய அரசு திட்டமிட்டது. இந்நிலையில், சிறப்பு பரிந்துரைகள் அடிப்படையில் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கை பற்றி ஒன்றிய அரசு ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், இந்த பள்ளிகளில் எம்பி.க்கள் பரிந்துரை அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. எம்பி.க்களுக்கான ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம், எம்பி.க்கள் கோட்டாவுக்கு வழங்கப்பட்ட 10 இடங்களும் இனிமேல், மாவட்ட கலெக்டர் அளிக்கும் பட்டியல் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.மேலும், பரம்வீர் சக்ரா, மஹாவீர் சக்ரா, வீர் சக்ரா, அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா மற்றும் சவுர்ய சக்ரா உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்களின் குழந்தைகளுக்கான சேர்க்கைகள், சிறப்பு ஏற்பாடுகள் மூலம் வழக்கம் போல் நடைபெறும். 2022-23 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் வரை நடைபெறுகிறது. விற்கப்படுவதால் நடவடிக்கைகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்பி.க்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 இடங்கள், ஏழை மாணவர்களுக்கு பெரும்பாலாலும் கிடைப்பது இல்லை. அவை ரூ.5 லட்சம் வரையில் விற்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாகவே, எம்பி.க்கள் பரிந்துரையில் மாணவர்கள் நிரப்பப்படும் ‘கோட்டா’வை ஒன்றிய அரசு பறித்து விட்டதாக கூறப்படுகிறது.