போக்ரோவ்ஸ்க் : உக்ரைனுக்கு உதவி வரும் போலந்து, பல்கேரிய நாடுகளுக்கு, இயற்கை எரிவாயு வினியோகத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு, உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த போரில், இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், ‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் போலந்து, பல்கேரிய நாடுகளுக்கு, ரஷ்யா இயற்கை எரிவாயு வினியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு, போலந்து மற்றும் பல்கேரிய நாட்டின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இயற்கை எரிவாயுவை வைத்து, தங்கள் நாடுகளை அச்சுறுத்துவதாக, போலந்து பிரதமர் மேத்தியுஸ் மொராவெய்க்கி மற்றும் பல்கேரிய பிரதமர் கிரில் பெட்கோ குற்றஞ்சாட்டி உள்ளனர்.இதற்கிடையே, அமெரிக்க ராணுவ அமைச்சர் லாய்டு ஆஸ்டின் நேற்று கூறுகையில், ”உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களை வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது.
போர் நடக்கும் வேகத்தில் இந்த பணிகள் நடக்க வேண்டும்,” என்றார்.மக்களை வெளியேற்ற சம்மதம்ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் நேற்று சந்தித்துப் பேசினார். அதில், மரியுபோலில் சிக்கி உள்ள மக்களை, பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய, ரஷ்ய அதிபர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Advertisement