புதுடெல்லி: முஸ்லிம்களின் ஐந்து வேளை தொழுகைக்கான மசூதிகளின் ‘அஸான்’ எனும் பாங்கு முழக்கம், ஒலிபெருக்கிகளில் ஒலிப்பது சர்ச்சையானது. இந்துத்துவா அரசியலை கொள்கையாகக் கொண்ட கட்சியினரால், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இது பிரச்சினையாக்கப்பட்டது.
இதையடுத்து பாஜக ஆளும் உ.பி.யிலும் இப்பிரச்சினை கிளம்பியது. இதனால் உருவான பதற்றத்தை தொடக்கத்திலேயே தணிக்கும் பொருட்டு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக உ.பி. உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவினேஷ் குமார் அவஸ்தி பிறப்பித்த உத்தரவில், “எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்திலும் ஒலிபெருக்கிகளின் ஓசை அதன் எல்லையை தாண்டக்கூடாது. சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒலி அளவையே பின்பற்ற வேண்டும். மேலும் தேவைக்கு அதிகமான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட வேண்டும். இதனை மாநிலம் முழுவதிலும் அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் ஆய்வுசெய்து ஏப்ரல் 30-க்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு கண்காணிக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உ.பி.யில் மசூதிகள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு கண்காணிக்கப்பட்டது. இதில் மாநிலம் முழுவதிலும் இதுவரை சுமார் 17,000 ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 320 ஒலிபெருக்கிகள் கூடுதலாக இருப்பதாகக் கூறி அகற்றப்பட்டுள்ளன.
சட்டம் சொல்வது என்ன?
ஒலிபெருக்கிகள் விவகாரத்தில் இந்தியாவில் சட்டவிதிமுறைகள் தெளிவாக உள்ளன. 2000 ஆண்டு ஒலி மாசு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகளின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மூடிய அறைகளிலும் கூட ஒலிபெருக்கிகளுக்கு அனுமதிபெறுவது அவசியம். இதில் திருமணம், உள்ளூர் பண்டிகைகள் உள்ளிட்ட சில சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நள்ளிரவு 12 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. மருத்துவமனை, கல்விக்கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் மாநில அரசுகளால் ‘அமைதிப்பகுதி’ என அறிவிக்கப்படுகிறது. இந்த இடங்களில் 100 மீட்டர் சுற்றளவுக்கு ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி கிடையாது.
தொழிற்சாலை பகுதி, வர்த்தகப் பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வெவ்வெறு டெசிபல் அளவில் ஒலி கட்டுப்பாடு உள்ளது. இதில் எவருக்கேனும் ஆட்சேபம் எனில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டவிதிகளை பின்பற்றாதது பலரது வழக்கமாக உள்ளது.