டெஸ்லா அதிபர், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை மொத்தமாக வாங்கியிருக்கிறார். அவர் டுவிட்டருக்குத் தன்னுடைய ‘விலை’யை அறிவித்ததும், அதற்கு எழுந்த ஆயிரக்கணக்கான எதிர்ப்புகளை, கடுமையான கேலிகளைக் கண்டுகொள்ளாமல் பொறுமையாக இருந்து பேரத்தை முடித்த விதமும் பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
மோடி அரசு அழைக்கும் 3 வெளிநாட்டு நிறுவனங்கள்.. எதற்கு தெரியுமா..?!
அதே நேரம், ‘கார் விக்கறவருக்கு எதுக்குச் சோஷியல் மீடியா?’ எல்லாம் பணத் திமிர்’ என்று அலட்சியமாகப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள்.
எலான் மஸ்க்
எலானின் (Elon Musk) வரலாற்றைப் படித்தவர்களுக்கு அவருடைய இந்தச் செயல் எந்த வியப்பையும் தராது, சொல்லப்போனால், அவருடைய எந்தச் செயலும் வியப்பைத் தராது. அடுத்து இதுதான் என்பதுபோன்ற வழக்கமான, பொதுமக்களுடைய கணக்குகள் எப்போதும் எலானுக்குப் பொருந்தியதில்லை.
ரஜினி டயலாக் மாதிரி
அவர் எந்த நேரத்தில் எந்தத் தொழிலில் இறங்குவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவர் இறங்கியபிறகு அது திடீரென்று மிகப் பிரமாதமான தொழிலாகத் தோன்றும், அதுதான் வியப்பு.
ஸ்பேஸ் எக்ஸ்
எடுத்துக்காட்டாக, ராக்கெட் என்றால் அது அரசாங்க நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து உருவாக்குகிற ஒரு விஷயம் என்றுதான் எல்லாரும் நினைக்கிறோம். திடீரென்று எலான் அந்தத் துறைக்குள் நுழையத் தீர்மானித்தார். ‘நானும் ராக்கெட் விடப்போகிறேன்’ என்றார், பிறகு அதை ‘நானே ராக்கெட் தயாரிக்கிறேன்’ என்று மாற்றிக்கொண்டார்.
கற்பனையில்லை
இதையெல்லாம் கேட்பதற்குக் கற்பனைக் கதையைப்போல் இருக்கலாம். ஆனால் எல்லாம் உண்மையில் நடந்தது. இப்படி அவர் எந்தப் பின்னணியும் இல்லாமல் திடுதிப்பென்று தொடங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இன்றைக்கு விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஒரு மிக முக்கியமான நிறுவனமாக இருக்கிறது.
ராக்கெட் தயாரிப்பு
என்னதான் பெரிய தொலைநோக்குச் சிந்தனையாளராக இருந்தாலும், தானே ராக்கெட் தயாரிக்கலாம் என்கிற நம்பிக்கை ஒருவருக்கு எப்படி வரும்? அதற்கான காரணத்தைக் கேட்டால் இன்னும் திகைப்பாக இருக்கும்.
ஜான் கார்வெ
2001ம் ஆண்டு, ஜான் கார்வெ என்பவரைச் சந்திக்கிறார் எலான். இந்த ஜான் தன்னுடைய சொந்த ஆர்வத்தின் அடிப்படையில் சில சிறிய ராக்கெட்களைச் செய்து ஏவிக்கொண்டிருந்தவர். அதில் ஒரு ராக்கெட்டை எலானுக்கு இயக்கிக் காட்டுகிறார் அவர். ஆனால், அவருடைய நேரம், அந்த ராக்கெட் ஒழுங்காகச் செயல்படவில்லை.
எலான் யோசனை
இப்போது எலானின் இடத்தில் இன்னொருவர் இருந்தால் என்ன நினைப்பார்? ‘ஒரு சின்ன ராக்கெட்டைக்கூட ஏவமுடியலை, ஹூம்’ என்று கேலியாகச் சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிடுவார்.
சரியான பணம், சரியான திறமை
ஆனால், ஜான் கார்வெயின் தோல்வியை எலான் வேறுவிதமாகப் பார்த்தார், ‘கையில் பெரிய அளவு காசு இல்லாமல் வெறும் ஆர்வத்தை முதலீடாகக் கொண்டு இவர்களால் இந்த அளவு முன்னேறமுடிகிறது என்றால், நாம் இந்தத் தொழிலில் சரியான அளவு பணத்தையும் திறமையையும் முதலீடு செய்தால் கண்டிப்பாக வெற்றிபெறலாம்’ என்று அவருக்குத் தோன்றியது, துணிந்து இறங்கி ஜெயித்துவிட்டார்.
ஏராளம்
இதுபோல் எலானின் வாழ்க்கையில் வியப்பூட்டும் தீர்மானங்களும் செயல்பாடுகளும் ஏராளம். அந்தப் பின்னணியில் பார்க்கும்போது அவர் டுவிட்டரை வாங்கத் தீர்மானித்தது இயல்பான ஒரு விஷயம்தான்.
அது தான் எலான் மஸ்க்
அது சரியா, தவறா, இதனால் எலானுக்கு என்ன பலன் (அல்லது இழப்பு), டுவிட்டருக்கு என்ன பலன் (அல்லது இழப்பு) என்றெல்லாம் இன்னும் சில ஆண்டுகளில் தெரியும். ஒருவேளை இது சொதப்பினாலும் எலான் இதைப்போல் இன்னொரு தீர்மானத்தை எடுக்கத் தயங்கமாட்டார். அது தான் எலான் மஸ்க்.
இண்டர்நெட்
பலரும் நினைப்பதுபோல் மென்பொருளோ இணையமோ எலானுக்குப் புதிது இல்லை. இணையம் என்றால் என்ன என்று பல முதலீட்டாளர்களுக்குத் தெரியாத நேரத்தில் ஓர் இணைய நிறுவனத்தைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி, நல்ல பணத்துக்கு விற்றுவிட்டு வெளியில் வந்தவர் அவர்.
பேபால்
அதன்பிறகு அவர் ஈடுபட்ட PayPalம் மிக முக்கியமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திப் புகழ் பெற்றது, டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றிலும் வன்பொருளோடு மென்பொருளும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது, இன்னும் OpenAI, NeuroLink என்று எலானுடைய தொழில்நுட்பப் பங்களிப்புகளை அடுக்கலாம்.
எலானுடைய டுவிட்டர் எப்படி இருக்கும்? இப்போதைய டுவிட்டரில் அவர் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும்?
டுவிட்டர் வாடிக்கையாளர்
முதலில், எலான் ஒரு தொடர்ச்சியான டுவிட்டர் பயனாளர். தன்னுடைய கருத்துகளைப் பொதுவில் பகிர்ந்துகொள்வது, வாடிக்கையாளர்களுடைய நாடித் துடிப்புகளைப் புரிந்துகொள்வது, சும்மா ஜோக் அடிப்பது என்று பலவிதங்களில் அவர் டுவிட்டரை மிக நன்றாகப் பயன்படுத்திவந்திருக்கிறார்.
அனுபவம்
அதனால், அதில் உள்ள நன்மை, தீமை, எரிச்சல்கள் அனைத்தும் (ஒரு பயனாளர் என்ற முறையில்) அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும், அதுசார்ந்த பல உறுதியான எண்ணங்களை உருவாக்கிக்கொண்டிருப்பார், அவற்றைத் தன்னுடைய சொந்த நிறுவனமான டுவிட்டரில் செயல்படுத்திப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கும்.
தோசை தியரி
ஆனால், இவையெல்லாம் டுவிட்டரைத் தலைகீழாகத் திருப்பிப்போடும் என்று நினைப்பதற்கில்லை. ஓர் உணவகத்தில் தோசை சாப்பிட்டுப் பழகியவர் அந்த உணவகத்துக்கு முதலாளியானால் தோசையில் புதுமைகளைக் கொண்டுவரக்கூடும், குறைகளைத் தீர்த்து மெருகேற்றக்கூடும், தோசைக்கல்லைத் தூக்கிவிட்டு அதை நூடூல்ஸ் கடையாக மாற்றிவிடுவார் என்று நினைக்க இடமில்லை.
பலம்
அடுத்து, டுவிட்டரின் மிகப் பெரிய பலம், அது உலகத்தின் போக்கை உடனுக்குடன் வெளிப்படுத்துகிற ஒரு கண்ணாடியாக இருக்கிறது. இதற்குக் காரணம், யார் வேண்டுமானாலும் சட்டத்துக்கு உட்பட்டு எதை வேண்டுமானாலும் வெளியிடுகிற கருத்துரிமை இப்போது இருக்கிறது.
ஆற்றல் மிக்கத் தளம்
உரையாடல்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் நடைபெறுகின்றன. படங்கள், வீடியோக்களைச் சேர்க்கிற வசதி (ஓரளவுக்கு) இருக்கிறது. இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது, டுவிட்டர் ஓர் எளிய, யாரும் பயன்படுத்தக்கூடிய, அதே நேரம் ஆற்றல் மிக்க ஊடகமாக உள்ளது.
பெரும் தலைகள்
இந்தச் சிறப்புத்தன்மையால்தான் பெரிய உலகத் தலைவர்களில் தொடங்கித் தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் இங்கு இருக்கிறார்கள், தொடர்ந்து எழுதுகிறார்கள். அந்த அடிப்படைப் பண்பை மாற்றும்விதமாக எலான் எதையும் செய்வார் என்று நம்புவதற்கில்லை.
ஏனெனில், டுவிட்டரை அவர் இவ்வளவு விலை கொடுத்து வாங்கக் காரணம், இத்தனை பேர் இங்கு எழுதுகிறார்கள், உலகைப் பிரதிபலிக்கும் ஊடகமாக அது இருக்கிறது என்பதுதான்.
ஆதிக்கம்
நிறைவாக, எலானுடைய அரசியல், சிந்தனைச் சார்பு ஒன்று இருக்கிறது. அதை அவர் ஒரு பயனாளராகத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டு தான் இருப்பார். தனக்குச் சொந்தமான நிறுவனத்தின் தயாரிப்புச் சார்ந்த தீர்மானங்களில் (Product Decisions) அதைத் திணித்துவிடுவாரா, அதாவது, தன் சார்புக்கு எதிரான சிந்தனைகளை முடக்கும் முயற்சிகளில் ஈடுபடுவாரா என்கிற கேள்விக்கு இப்போது நம்மிடம் பதில் இல்லை.
கருத்துச் சுதந்தரம்
அவ்வளவு வெளிப்படையாகக் கருத்துச் சுதந்தரத்தை முடக்கும் முயற்சியில் எந்த ஊடகமும் ஈடுபடாது, டுவிட்டருக்கும் அது சரியான தொழில் தீர்மானமாக இருக்காது என்பதால் அந்த அச்சத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு காத்திருந்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
லாபம் கிடைக்குமா..?
எலான் நடத்தப்போகும் டுவிட்டரில் நான் மிகவும் எதிர்பார்க்கிற விஷயம், அது ஒரு லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக ஆகுமா என்பது தான். ஃபேஸ்புக்குக்கு இணையான, சொல்லப்போனால் அதைவிட ஒரு படி அறிவு மிகுந்த சமூக ஊடகமாக டுவிட்டர் மதிக்கப்பட்டாலும், அதை வைத்து எப்படிக் காசு பண்ணுவது என்று யாருக்கும் இதுவரை சரியாகத் தெரிந்திருக்கவில்லை.
எலான் மஸ்க்-ன் டுவிட்டர்
இந்த விஷயத்தில் அவர்கள் எடுத்திருக்கிற முயற்சிகள் சிறிய அளவில்தான் வென்றிருக்கின்றன. மிக வெற்றிகரமான தொழிலதிபர் என்ற முறையில் டுவிட்டரின் ஆன்மாவில் கை வைக்காமல் எலான் இதைத் திருப்பிப்போட்டுவிட்டார் என்றால், இது அவருடைய தொழில் வாழ்க்கையில் இன்னொரு மிகப் பெரிய புரட்சியாக இருக்கும்.
How Elon Musk owned twitter will be transform?
How Elon Musk owned twitter will be transform? எலான் மஸ்க்-ன் டுவிட்டர் எப்படி இருக்கும்?