கோவளம் வடிநிலப்பகுதி, மடிப்பாக்கம் மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சி, தென்சென்னை கோவளம் வடிநிலப் பகுதியில் மடிப்பாக்கம் மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவிடன்
ரூ.150.45 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பருவமழைக் காலங்களில், கோவளம் வடிநிலப் பகுதியில் வெள்ள பாதிப்புள்ளாகும் தென் சென்னையின் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்நல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளான ஶ்ரீனிவாச நகர், சதாசிவம் நகர், நங்கநல்லூர், மடிப்பாக்கம், ராம் நகர், நேரு காலனி, புவனேஸ்வரி நகர், பாலாஜி நகர், ராதா நகர், எம்.சி.என். நகர், ஆனந்தா நகர், கண்ணகி நகர், ரிவர்வியூ காலனி, செம்மஞ்சேரி மற்றும் சுனாமி காலனி ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் ரூ.1,714 கோடி மதிப்பில் KfW ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் துறைசார்ந்து மேற்கொண்ட ஆய்வுக்கூட்டத்தில் கோவளம் வடிநிலப்பகுதியில் மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் முதற்கட்டமாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படி கோவளம் வடிநிலப்பகுதியில், ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்ட பணியில் M1 மற்றும் M2 திட்டக் கூறுகளில் உள்ள ஆலந்தூர் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் மிகவும் அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளான ஶ்ரீனிவாச நகர், சதாசிவம் நகர், நங்கநல்லூர், மடிப்பாக்கம், ராம் நகர், நேரு காலனி ஆகிய பகுதிகளில் 39.78 கி.மீ. நீளத்திற்கு ரூ.150.45 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ஒப்பம் கோரப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி ஆணையின்படி, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பணி ஆணை வழங்கப்பட்ட நாள் முதல் இரண்டாண்டு காலத்திற்குள் இந்த மழைநீர் வடிகால் பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட புவனேஸ்வரி நகர், பாலாஜி நகர், ராதா நகர், எம்.சி.என். நகர், ஆனந்தா நகர், கண்ணகி நகர், ரிவர்வியூ காலனி, செம்மஞ்சேரி மற்றும் சுனாமி காலனி ஆகிய பகுதிகளில் ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் 120.55 கி.மீ. நீளத்திற்கு ரூ.447.03 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஜெர்மன் நாட்டு Kfw வங்கியின் ஒப்புதல் பெற சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை மேற்கொள்ள விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.