புதுடெல்லி: காங்கிரசின் அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வருதல் தொடர்பாக பிரசாந்த் கிஷோரின் முன்மொழிவுகள் உள்ளதால், சோனியா காந்தி அமைத்த மூத்த தலைவர்கள் குழு அதனை ஏற்கவில்லை. அதனால் அவர் காங்கிரசில் சேரவோ, தேர்தல் பணிக்கான பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி பல மாநில தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கட்சிப் பதவியில் இருந்து விலகிவிட்டனர். கட்சிக்குள்ளும் தலைமை மாற்றம் குறித்து அவ்வப்போது மூத்த தலைவர்கள் சிலர் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். நடப்பாண்டு இறுதியில் இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும், வரும் 2024ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் மற்றும் காங்கிரஸ் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, காங்கிரஸ் தலைமையிடம் கடந்த வாரம் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் (பிகே) அறிக்கை ஒன்றை அளித்திருந்தார். அவர் அளித்த அறிக்கையை ஆய்வு செய்ய 8 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குழுவை, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நியமித்தார்.இந்த குழுவில் மல்லிகார்ஜுன் கார்கே, சல்மான் குர்ஷித், ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், பூபிந்தர் சிங் ஹூடா, அமரீந்தர் சிங் வேடிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு லோக்சபா தேர்தலுக்கான அதிகாரம் பெற்ற குழுவாக செயல்படும் என்று கூறப்பட்டது. இவர்களும் தங்களது அறிக்கையை சோனியா காந்தியிடம் ஒப்படைத்தனர். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக சோனியா காந்தி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரசாந்த் கிஷோர் நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘காங்கிரஸ் கட்சியில் இணையவும், தேர்தல்களுக்கு பொறுப்பேற்க விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டேன். காங்கிரஸ் கட்சிக்கு என்னைவிட தலைமையே முக்கியம். கட்சிக்குள் ஆழமாக வேரூன்றி இருக்கும் அடிப்படை கட்டமைப்பிற்குள் உள்ள பிரச்னைகளை தீர்க்க முன்வர வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸில் சேரவும், அதிகாரம் பெற்ற குழுவில் இணையவும் பிரசாந்த் கிஷோருக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்’ என்று தெரிவித்திருந்தார். மேற்கண்ட இரு பதிவுகளையும் பார்க்கும் போது பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பின்னணி காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதாவது 2024ல் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளதால் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்க்க காங்கிரஸ் விரும்பியது. ஆனால் அவர் கூறிய அதிகார மாற்றத்திற்கான சூத்திரத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை. அதனால் காங்கிரசுடான ஒப்பந்தத்தில் இருந்து பிரசாந்த் கிஷோர் பின்வாங்கியுள்ளார்.மேலும், பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைந்தால் அவருக்கு சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்பட மாட்டாது என்றும், கட்சியின் அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது. சோனியா காந்தி அமைத்த குழு அளித்த பரிந்துரையில், பிரசாந்த் கிஷோரை கட்சிக்குள் கொண்டு வந்தால், அது சோனியா காந்தி குடும்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் காங்கிரஸ் தலைவர் தேர்தலை இன்னும் நடத்த முடியாத காரணத்தால், காங்கிரஸ் மேலிடம் பிரசாந்த் கிஷோரின் முன்மொழிவுக்கு உடன்படவில்லை. ஒருவேளை பிரசாந்த் கிஷோருக்கு துணை தலைவர் பதவி கொடுத்தால், அவர் கட்சியில் என்னென்ன முடிவுகள் எடுத்தாலும், அதன் பெருமை சோனியா காந்தி குடும்பத்துக்குப் பதிலாக பிரசாந்த் கிஷோரையே சென்று சேரும் என்றும், அவரை கட்சியில் சேர்ப்பதால் சோனியா காந்தி குடும்பத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அதன் மூலம் கட்சித் தலைமையை கைப்பற்றும் வாய்ப்பும் ஏற்படும் என்றும் அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், அந்த குழு பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு முன், கட்சிக்கான தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்க அவரை கட்டுப்படுத்தி உள்ளது. அதனால், அவர் காங்கிரஸ் கட்சியில் சேரும் முடிவில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது. எப்படியாகிலும் அடுத்த மாதம் 13, 14, 15ம் தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் கருத்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. அப்போது 2024 மக்களவை தேர்தல், மாநில சட்டப் பேரவை தேர்தல் தோல்வி, கட்சியை மறுசீரமைப்பு செய்தல், வலுப்படுத்துதல், தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதால், அப்போது முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘பிகே’ மீது காங்கிரசுக்கு கோபம் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவதாக பேசப்பட்டு வந்த நிலையில், மறுபுறம் அவர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் அம்மாநில சட்டப் பேரவை தேர்தல் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி, பிரசாந்த் கிஷோரின் முந்தைய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுதல் குறித்தும், அதற்கான தேர்தல் வியூக நிபுணராகவும் பணியாற்றினார். தெலங்கானாவை பொருத்தமட்டில் காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அதனால், காங்கிரசுடன் இணைவதாக கூறப்பட்ட அதே காலகட்டத்தில், சந்திர சேகரராவுடன் பேசியது காங்கிரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதேபோல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பிரசாந்த் கிஷோர் சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேற்குவங்கத்தில் காங்கிரசுக்கும், மம்தா கட்சிக்கும் போட்டி உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பிரசாந்த் கிஷோரை எப்படி நம்புவது என்பது காங்கிரசுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.