திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணா குளத்தை அடுத்த கோதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மன்னாக்காகுடி சாஜூ (வயது 60). தொழிலாளி.
இவரது மனைவி எலியம்மா. இவர்களுக்கு 3 மகன், மகள்கள் உள்ளனர். சாஜூவுக்கு மதுபழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவார்.
மேலும் வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுப்பதில்லை. அதனை குடித்தே செலவளித்து வந்தார். இதனால் அவருக்கும் மனைவி எலியம்மாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சாஜூ நேற்றும் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். இதனை அவரது மனைவி தட்டி கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.
ஆத்திரம் அடைந்த எலியம்மா வீட்டில் இருந்த கட்டையை எடுத்து கணவர் சாஜூவை சரமாரியாக தாக்கினார். மேலும் தலையிலும் அடித்தார். இதில் சாஜூ ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் சாஜூவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சாஜூ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து எலியம்மா கோதமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்த போலீசாரிடம், குடும்ப தகராறில் கணவரை அடித்து கொன்றுவிட்டதாக கூறி சரண் அடைந்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் எலியம்மா வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்ததோடு, சாஜூவின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.