கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக மாநில நிர்வாகி சஜீவனிடம் இன்றும் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் உதகை காவல்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். உதகை ஏ.டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் இந்த வழக்கு சம்மந்தமாக விசாரித்து வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அரசுத்தரப்பு சாட்சியங்கள் என 220 பேரிடம் இதுவரை விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவையில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கிற்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரான சஜீவனை தற்போது தனிப்படையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் செவ்வாய்கிழமை சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
சஜீவன் கனகராஜுடைய நண்பர் என்ற அடிப்படையில் மட்டுமின்றி, கொள்ளை அடித்து விட்டு தப்பிவிட்ட 9 பேர் கொண்ட கும்பல் கூடலூர் அருகே காவல்துறை சோதனையில் சிக்கிய நிலையில், சிபாரிசின் பேரில் 9 பேரும் விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் சஜீவனை இந்த வழக்கில் தொடர்பு படுத்துவதற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் செவ்வாய்கிழமை விசாரணை மேற்கொண்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் விசார்ணை மேற்கொண்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM