அறநிலைத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பும் வரை அதிகாரிகள் காத்திருக்கிறார்கள் என்றும், நடவடிக்கை எடுக்காமல் காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என்றும், சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சாவூர், ஈரோடு மாவட்டம் மாவட்டத்தின் கோவில் நிலங்களில் அடுக்குமாடி கட்டிடங்கள், சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்து சமய அறநிலைத்துறை சார்பில், “ஆக்கிரமிப்பு நிலங்களை கணக்கிடவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவில் நிலங்களை மீட்பதற்கு கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்து மூன்றாவது ஒரு நபர் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்த பிறகுதான் அறநிலைத்துறை தெரிகிறது. அதுவரை அறநிலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், அதிகாரிகள் செயல்படாத காரணத்தினால் அவர்களின் ஒரு வருட சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என்றும், புகார் குறித்து சம்பந்தப்பட்ட ஆணையர்களிடம் அதிகாரிகள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிடங்கள் கட்டும் வரை அதிகாரிகள் காத்திருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.