சபாநாயகர் முன்பு தர்ணா-அமளி: சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றம்

சென்னை:

தஞ்சாவூரில் தேர் இழுக்கும் போது மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்த நிகழ்வு குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது சட்டசபையில் உள்ள கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

தேர் இழுக்கும் சம்பவத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 4 சிறுவர்கள், ஒரு பெண் உள்பட 15 பேர் காயம் அடைந்துள்ளனர். மற்றவர்கள் தள்ளி நின்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். தேர் இழுக்கும் சம்பவத்தின் போது முன்எச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். சாலை செப்பனிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அரசு அறிவித்துள்ளது. இது போதாது ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அங்கு ஆறுதல் கூற சென்றுள்ளார். அ.தி. மு.க. சார்பிலும் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

தஞ்சை சம்பவம் போல் இனி நடைபெறாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த துயர சம்பவத்தில் அரசு உரிய பாதுகாப்பு வழங்காததை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வெளிநடப்பு செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.

அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், ‘எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூற வேண்டும் என்பதற்காக சொல்லக்கூடாது. அங்கு நடைபெற்ற திருவிழாவில் தேர் இழுக்கப்படவில்லை. சப்பரம் தான் இழுக்கப்பட்டது. அரசுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் விழா நடத்தப்பட்டது’ என்று விளக்கமாக பதில் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மற்ற கட்சி உறுப்பினர்களும் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் வெளிநடப்பு செய்திருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சட்டசபைக்குள் வந்தனர். அப்போது செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. பேசிக் கொண்டிருந்தார்.

அவர் பேசும் போது, ‘கும்பகோணம் மகாமகம் குளத்தில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா குளித்த நேரத்தில் 44 பேர் மரணம் அடைந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிக்கொண்டிருந்தார்.

இதுசம்பந்தமாக அன்று ஜெயலலிதா சட்டசபையில் என்ன பேசினார் என்ற விவரத்தை அவைக் குறிப்பில் இடம்பெற்றதை அப்படியே வாசித்துக் காட்டினார். இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்வ பெருந்தகை, ஜெயலலிதா பற்றி கூறிய கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து விளக்கம் அளித்து பேச வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள். ஆனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேச வாய்ப்பு கொடுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள்.

ஆனால் சபாநாயகர் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஏற்கனவே நீங்கள் பேசிவிட்டீர்கள். மீண்டும் உடனே வாய்ப்பு தர முடியாது. எல்லோரும் பேசி முடித்த பிறகு வாய்ப்பு தருகிறேன் என்றார்.

ஆனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பேச வாய்ப்பு தருமாறு கேட்டனர். ஒரு கட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆவேசம் அடைந்து சபா நாயகர் இருக்கை அருகே கோ‌ஷமிட்டனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை அருகே தரையில் அமர்ந்து கோ‌ஷமிட்டனர்.

இதைத்தொடர்ந்து ஏராளமான எம்.எல்.ஏ.க் களும் சட்டசபைக்குள் அமர்ந்து அவருடன் தர்ணாவில் ஈடுபட்டனர். சபா நாயகர் பலமுறை எச்சரித்தும் அவர்கள் இருக்கைக்கு செல்ல மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே சபை காவலர்கள் சட்ட சபைக்குள் வந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்றினார்கள்.

அப்போது கே.பி. முனுசாமிக்கும், அமைச்சர் மூர்த்திக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபை சுமார் 10 நிமிட நேரம் அமளியுடன் காணப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.