இலங்கைக்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தூதுக்குழுவின் தலைவர் திரு. லூக்காஸ் பெட்ரிடிஸ் அவர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 ஏப்ரல் 25ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.
இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய பங்களிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் பாராட்டினார். மோதல் சூழ்நிலையின் போது கடந்த காலத்தில் ஆற்றிய முக்கிய பங்கு மற்றும் மோதலுக்குப் பிந்தைய மறுவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு உதவுவதில் அதன் தற்போதைய வகிபாகம் மற்றும் ஆயுதப்படைகள், பொலிசார் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஐ.எச்.எல். பயிற்சி ஆகியவற்றையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸின் விளக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் என திரு. பெட்ரிடிஸ் தெரிவித்த அதே வேளை, அரசாங்கத்தின் தேவைகளின் அடிப்படையில் மனிதாபிமான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் மேலும் சுட்டிக்காட்டினார்.
திரு. பெட்ரிடிஸின் புதிய பணிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக தனக்கு அடுத்த தலைவருடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவதாக உறுதியளித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் இதன் போது கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஏப்ரல் 27