திருவனந்தபுரம்: சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகை புகார் செய்ததை தொடர்ந்து மலையாள நடிகர் விஜய் பாபு மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 1983ல் சூரியன் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விஜய் பாபு. அதன்பிறகு பிலிப் அண்ட் தி மங்கி பென், பெருச்சாழி, ஆடு, ஆடு 2, ஹோம், அந்தாக்ஷரி உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 22ம் தேதி கோழிக்கோட்டை சேர்ந்த மலையாள நடிகை ஒருவர் கொச்சி தெற்கு போலீசில், நடிகர் விஜய் பாபுவுக்கு எதிராக ஒரு புகார் கொடுத்தார். அதில், தனக்கு கூடுதல் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பிளாட்டுக்கு வரவழைத்து விஜய் பாபு பலமுறை பலாத்காரம் செய்தார்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நடிகர் விஜய் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை அவரிடம் விசாரணை நடத்தவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் பாபு, தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: எனக்கு எதிராக பலாத்கார புகார் கொடுத்துள்ள நடிகையை 2018 முதல் தெரியும். நான் தயாரித்த ஒரு படத்தில் அவர் நாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றி விழாவுக்கு அழைத்தபோது அவர் வரவில்லை. அதன் பிறகு நான் அந்த நடிகையை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளவில்லை. என்னை சந்திக்க வேண்டும் என்று கூறி பலமுறை போனில் மெசேஜ் அனுப்பினார். தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி ஒருமுறை என்னை வந்து சந்தித்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை. என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் தான் அவரை தூண்டிவிட்டு புகார் கொடுக்க வைத்துள்ளனர். அந்த நடிகை மீது மானநஷ்ட வழக்கு தொடர தீர்மானித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.