வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ”அமெரிக்காவின் ‘டெஸ்லா’ நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை தயாரிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை; ஆனால் சீனாவில் தயாரித்து இந்தியாவில் இறக்குமதி செய்யக்கூடாது,” என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த சர்வதேச மாநாட்டில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நிதின் கட்கரி பேசியதாவது:இந்தியா மிகப் பெரிய சந்தை, எலான் மஸ்க் விரும்பினால் இந்தியாவில் அவரது டெஸ்லா மின்சார கார்களை தயாரிக்கலாம். இதற்கான கட்டமைப்பு வசதிகள் இங்கு தாராளமாக உள்ளன. விற்பனையாளர்கள் உள்ளனர். அனைத்து தொழில்நுட்பங்களுடன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இங்கு டெஸ்லா கார்களை தயாரித்து ஏற்றுமதி செய்யலாம். ஆனால் எலான் மஸ்க், சீனாவில் டெஸ்லா கார்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்ய விரும்பினால் அதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, அவற்றின் மதிப்பிற்கேற்ப, 60 – 100 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்படுகிறது. மின்சார கார்களுக்கு, 40 லட்சம் ரூபாய் என்ற நிலையான மதிப்பில் வரி விதிக்க வேண்டும் என, டெஸ்லா நிறுவனம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அத்துடன், சமூக நலத் திட்டங்களுக்கு வசூலிக்கப்படும், 10 சதவீத வரியை நீக்கவும் வலியுறுத்தியது. இதை ஏற்க மறுத்த மத்திய அரசு, டெஸ்லா கார் தயாரிப்பை இங்கு துவக்கிய பின் வரி குறைப்பு பற்றி யோசிக்கலாம் என்றது. இதையடுத்து டெஸ்லா, இந்தியாவில் கார் தயாரிக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.
Advertisement