ஆந்திர மாநிலம் கர்னூலில் சுங்கச்சாவடியில் நிற்காமல் சென்ற லாரியின் பம்பர் மீது டோல்கேட் ஊழியர் ஏறி நின்று கொண்ட நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் லாரி ஓட்டுநர் 10 கிலோ மீட்டர் தூரம் வரை லாரியை ஓட்டிச் சென்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.
ஹரியானா மாநில பதிவெண் கொண்ட லாரியை தடுத்து நிறுத்துமாறு அமக்கதாடு சுங்கச்சாவடிக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, ஊழியர்கள் அனைவரும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட லாரி வந்ததும் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
லாரி நிற்காமல் சுங்கச்சாவடியை கடந்து செல்வதை அறிந்த டோல்கேட் ஊழியர் சீனிவாசலு, லாரியின் முன்பக்கம் பம்பர் மீது கம்பியை பிடித்தவாறு ஏறி நின்று கொண்டு நிறுத்தச் சொல்லி கூறியிருக்கிறார்.
அப்படியும் லாரியை நிறுத்ததாக ஓட்டுநர் 10கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. சக சுங்கச்சாவடி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை போலீசார் லாரியை மடக்கி பிடித்து ஓட்டுநரை கைது செய்தனர்.