மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், ஆடம் மில்னே ஆகியோர் காயம் காரணமாக விலகி விட்டனர்.
இந்த நிலையில் பயிற்சியின் போது கணுக்காலில் காயம் அடைந்த சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி (இங்கிலாந்து) நேற்று முன்தினம் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடவில்லை. அத்துடன் அந்த லீக் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்கையில் கையில் காயம் அடைந்த பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு சிகிச்சை பெற்று கொண்டு ஆடினார்.
பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த பிறகு சென்னை அணியின் தலைமைபயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அளித்தபேட்டியில், ‘மொயீன் அலியால் கணுக்காலை அசைக்க முடிகிறது. ‘எக்ஸ்ரே’ எடுத்து பார்த்ததில் அவருக்கு எலும்பு முறிவு எற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற காயத்தில் இருந்து மீள ஒருவாரம் பிடிக்கும். எலும்பு முறிவு ஏற்படாததால் மொயீன் அலி விரைவில் முழு உடல் தகுதியை எட்டுவார் என்று நம்புகிறோம்.
அம்பத்தி ராயுடுக்கு ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டகையில் மீண்டும் காயம் ஏற்பட்டாலும் அது பயப்படும் வகையில் இல்லை. டோனிக்கு முன்னதாக பேட்டிங் செய்ய ரவீந்திர ஜடேஜாவை அனுப்பியது குறித்து கேட்கிறீர்கள். 13-வது ஓவரிலேயே 4-வது விக்கெட் வீழ்ந்ததால் ரவீந்திர ஜடேஜாவை அனுப்பினோம். அந்த வரிசையில் அவர் கடந்த காலங்களில் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்.
15-வது ஓவருக்கு பிறகு டோனி களம் இறங்கினால் சிறப்பாக இருக்கும் என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சீசனில் வாய்ப்பு வரும் போது ஹேங்கர்கேர் போன்ற இளம் வீரர்களை பயன்படுத்துவோம்’ என்று தெரிவித்தார்.