வாஷிங்டன் : இந்தியாவில் ‘செமி கண்டக்டர்’ எனப்படும் ‘சிப்’களின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு துறைக்கு அளித்துள்ள ஊக்கச் சலுகைகளை பயன்படுத்தி, கூடுதல் முதலீடு செய்யும்படி அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நிர்மலா சீதாராமன் தலைமையில் ‘செமி கண்டக்டர்’ நிறுவனங்களின் உயரதிகாரிகள் கூட்டம் நடந்தது.இதில் இந்தியாவில் செமி கண்டக்டர் தயாரிப்பு துறைக்கு மத்திய அரசு 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டம் அறிவித்திருப்பது குறித்து நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் ஊக்கச் சலுகை திட்டத்தை பயன்படுத்தி செமி கண்டக்டர் துறையில் கூடுதல் முதலீடு செய்யும்படி நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து செமி கண்டக்டர் துறைக்கு ஒரு நாட்டை நம்பியிராமல் இத்துறையில் நாளை சர்வதேச மையமாக உருவெடுக்க உள்ள இந்தியாவில் கூடுதல் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக உயரதிகாரிகள் கூறினர். ‘பர்ஸ்ட் சோலார்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி நிர்மலா சீதாராமனை சந்தித்து, இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 5250 கோடி ரூபாய் முதலீடு செய்வது குறித்து ஆலோசித்தார்.
அதுபோல ‘ஊபர்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி, டாரா கோஸ்ரோவ்ஷாஹி, இந்தியாவில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்து நிர்மலா சீதாராமனிடம் எடுத்துரைத்தார்.ஊபர் ஓட்டுனர்களின் எண்ணிக்கையை நான்கு மடங்கு உயர்த்தி 20 லட்சமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement