சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை அடுத்த கண்ணியாம்பட்டியை சேர்ந்தவர் கந்தன் (வயது 56). தி.மு.க பிரமுகரான இவர் கடந்த முறை கோணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார்.
இவர், தற்போது தி.மு.க.வில் மாவட்ட பிரதிநிதியாக பொறுப்பு வகித்தார். மேலும், இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணிகளும் செய்து வந்தார்.
இன்று காலை கந்தன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது சின்னப்பையன், மணிகண்டன் ஆகியோர் திடீரென அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கந்தனை வெட்டினர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த கந்தனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக சீரகாபாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த எடப்பாடி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் கொங்கணாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, நிலத்தகராறு காரணமாக அவர்கள் கந்தனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து, கொங்கணாபுரம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.