தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 1 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற சித்திரை திருவிழாவின்போது நடந்த தேர் பவனியில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம். இந்த சம்பவத்தில் மேலும் 15 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்த சோக சம்பவத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு அதிமுக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் தலா ஒரு லட்ச ரூபாயும், அதேபோல் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்தனை பெரிய துயரத்தை சந்தித்திருக்கும் கிராம மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு விரைந்து முழுமையாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க:தஞ்சை தேர் விபத்து: நேரில் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; இழப்பீடு தொகையும் அறிவிப்பு Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM