தஞ்சை சப்பர ஊர்வல விபத்து எதிரொலியாக பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாக்களில் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் மணி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் சப்பர ஊர்வலத்தின்போது நிகழ்ந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தலைவர், பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சியினர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் சித்திரை மாதம் முழுவதும் நகரப்பகுதி, ஊரகப்பகுதி என பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கோவில் திருவிழாக்களில் காவல்துறையின் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணி தெரிவித்துள்ளார்.
மேலும் தேரோட்டம் நடத்த பொதுப்பணித்துறை அனுமதி, நெடுஞ்சாலைத்துறை அனுமதி ஆகியவை இருக்கவேண்டும் என்றும், தேரோட்டம் முடியும் வரை தேர் செல்லும் வீதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், தீயணைப்பு வாகன முன்னேற்பாடு இருக்கவேண்டும் என்றும் எஸ்.பி மணி தெரிவித்துள்ளார். மேலும் கோவில் திருவிழாக்களில் கட்அவுட் வைத்தல், மின்கம்பங்களில் தோரணம் கட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், அனுமதியில்லாத நேரத்தில் வாணவேடிக்கை நடத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய திருவிழாக்களில் கூட பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் விழாக்குழுவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள எஸ்.பி மணி, மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM