தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை இன்று நேரில் சந்திக்கவிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தர். மேலும் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேர் கவலைக்கிடம் எனத் தகவல்கள் தெரிகின்றன. தற்போதைக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், தேர் திருவிழா விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றார். தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய நிலையில் ஐ.ஜி.யும் ஆய்வு செய்து வருகிறார்.
அதிகாரிகள் அனைவரும் தஞ்சை சென்று ஆய்வு செய்து வரும் சூழ்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் களிமேடு பகுதிக்கு நேரில் செல்ல உள்ளார். இன்று காலை 11:30 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் நேரில் செல்வதுடன், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளளார். அத்துடன் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை விபத்து தொடர்பாக அனைத்து கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்திய செய்தி: 11 பேர் உயிரிழப்பு: தஞ்சை தேர் விபத்து நடந்தது எப்படி?- முழு விவரம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM