சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:
அடுத்த 10 ஆண்டுகளில் மின் உற்பத்தி அளவு 32 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 66 ஆயிரம் மெகாவாட் ஆக அதிகரிக்கப்படும். அதில், மின் வாரியத்தின் சொந்த உற்பத்தி அளவு 7,175 மெகாவாட்டில் இருந்து 32,592 மெகாவாட்டாக உயர்த்தப்படும். சொந்த உற்பத்தியானது 21 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயரும். தமிழகம் முழுவதும் புதிய மின்பாதைகள் அமைக்கப்படுவதுடன் பழைய மின்பாதைகள் தரம் உயர்த்தப்படும். மரபுசாரா மின்உற்பத்தியை அதிகரிக்க அதிக கவனம் செலுத்தப்படும். மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்புகள் வழங்கியுள்ளோம். கடந்த நிதி ஆண்டில் கூடுதலாக 8 லட்சத்து 17 ஆயிரம் மின்இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒருசில இடங்களில் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டது. அப்பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டது. இனி தொடர்ந்து தடையின்றி மின்சாரம் வழங்கப்படும்.
மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையத்துக்கு 7 லட்சத்து 82 ஆயிரத்து 127 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 7 லட்சத்து 77 ஆயிரத்து 489 புகார்களுக்கு, அதாவது 99 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டன. மின்சார சாதனங்கள் தமிழகம் முழுவதும் ஒரே விலையில் கொள்முதல் செய்யப்படும். மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர் நியமனம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பளவை அதிகரிக்கவும் நடப்பு நிதி ஆண்டில் (2022-23) 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின்இணைப்புகள் வழங்கப்படும். கடந்த 2014 ஏப்.1 முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரை நிலுவையில் உள்ள சிறப்பு முன்னுரிமை விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் நடப்பு ஆண்டிலேயே இலவச மின் இணைப்பு அளிக்கப்படும்.
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பரந்த அடித்தளத்தை கொண்ட மின்கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக, தேவையான இடங்களில் மிகக்குறுகிய அடித்தளம் கொண்ட உயர் மின்னழுத்த ஒற்றை மின்கம்பங்கள் அமைக்கப்படும்.
தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ரீதியிலான சாத்தியக்கூறுகள் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவப்படும்.
ஊரக மின்பாதைகளில் விவசாய இணைப்புகள் மட்டும் கொண்ட மின்பாதைகளை சூரிய ஒளிசக்தி மூலம் மின்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான பழைய காற்றாலைகளை மாற்றி புதிய காற்றாலை மற்றும் சூரிய சக்தியுடன் இணைந்த (Hybrid) மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சுசீந்திரம் ஆகிய ஊர்களில் தேரோடும் நான்கு மாடவீதிகளில் உள்ள மேல்நிலை மின்கம்பிகள், புதைவட மின்பாதைகளாக மாற்றியமைக்கப்படும். இதன்மூலம் மின் விபத்து முற்றிலும் தடுக்கப்படும்.
தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக ரூ.1,649 கோடி செலவில் 100 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். ரூ.166 கோடி மதிப்பீட்டில் உயர் அழுத்த மின்மாற்றிகளின் (டிரான்ஸ்பார்மர்ஸ்) திறன் மேம்படுத்தப்படும்.
அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள துணை மின்நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். மின்தடங்கல் எதுவும் இல்லாமல் உயர் மின்அழுத்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மேலும் ஒரு புதிய ஹாட்லைன் கோட்டம் உருவாக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
டாஸ்மாக் ஊழியருக்கு ரூ.500 ஊதிய உயர்வு
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பிறகு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்கள் வேறு தொழில்கள் மேற்கொள்ள உதவுவதற்காக மானியமாக ரூ.5 கோடி மறுவாழ்வு நிதி வழங்கப்படும். மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.4 கோடி ஒதுக்கப்படும்.
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் (டாஸ்மாக்) பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு இந்த மாதம் (ஏப்ரல்) முதல் தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 24,805 பேர் பயன்பெறுவர்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.