Tamilnadu Assembly Highlights : தமிழக சட்டசபையில் கடந்த மாத இறுதியில் நடப்பு ஆண்டுக்காக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாளில் வேளான் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு துறைகளுக்காக மானிய கோரிக்கை தொடங்கியது.
இதில் இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான நிகழ்வு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த விபத்தில் தமிழக அரசு சரியாக பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கூறி தமிழக அரசை கண்டிக்கும் வகையில் வெளிநடப்பு செய்வதாக கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது.
தாம்பரம் செங்கல்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு :
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, கொங்கு நாடு மக்கள் கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன். சென்னைக்கு உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் பெரிய போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருவதாகவும் இதனை தவிர்க்க செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உயர்மட்ட சாலை அமைக்க அரசிடம் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரையிலும், பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், உயர்மட்ட சாலை அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் வரையெறுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது தொடர்பான பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தஞ்சை விபத்து குறித்து விசாரிக்க தனி குழு :
தொடர்ந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் தஞ்சை தேர் விபத்தில் அப்பாவி மக்கள் இறந்ததை வைத்து அரசியல் செய்ய நினைக்க வேண்டாம் என்றும், அதிமுகவினரின் செயல் நியாயமா என்பதை சபை உறுப்பினர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்ற சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
தொடர்ந்து சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூச்சலிட்டு அவைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்திரவிட்டார்.
தஞ்சை விபத்து குறித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அரசுக்கு தெரிவிக்காமல் தஞ்சையில் திருவிழா நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். மேலும்,தஞ்சை காளிமேடு பகுதியில் நடைபெற்றது திருவிழா அல்ல, அது சப்பரம் என்றும் ஊர்மக்களே இதை சேர்ந்து நடத்தியதாக கூறியுள்ளார்.
சட்டக்கல்லூரியில் கூடுதல் முதுநிலை படிப்புகள் :
தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, புதுப்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரிகளில் கூடுதலாக முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் படித்த 17 சட்ட பட்டதாரிகளுக்கு தலைமை செயலக சட்டத்துறையில் தன்னார்வ பயிற்சி திட்டம் தொடங்கப்படும் என்றும், இதற்காக ஒரு பட்டதாரிக்கு மாதம் தோறும் தலா 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
ஆரணியில் சிப்கோ தொழிற்பேட்டை
விவசாயமும் நெசவும் பிரதான தொழிலாக உள்ள ஆரணியில். நெல் உம்மியை கொண்டு எண்ணெய் எடுக்கவும், பட்டு கைத்தறி உற்பத்திக்கு தேவையா மூலப்பொருட்கள் கிடைப்பதால், ஆரணி தொகுதிக்கு சிப்கோ தொழிற்பேட்டை அமைப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திருவண்ணாமலையில் 15.56 ஏக்கரில் 13 தொழிற்மனைகள் மற்றும், 16 தொழிற்கூடங்களுடன் தொழிற்பேட்டை இயங்கி வருகிறது.
ஆரணி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதியுடன் கூடிய தகுதியான நிலம் கண்டறிந்து தெரிவிக்கும் பட்சத்தில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறைந்தபட்சம் 20 தனியார் தொழில் முனைவோர்கள் சேர்ந்து தகுதியான நிலத்துடன் தொழிற்பேட்டை அமைக்க முன்வரும் பட்சத்தில் அதிகபட்சமாக ரூ. 15 கோடி மாநில அரசின் மானியத்துடன் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.