தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோயிலில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று (ஏப்.27) தேர் பவனி நடைபெற்றது. அப்போது தேர் மீது மின்சார கம்பி உராய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து, பலர் தூக்கி வீசப்பட்டனர். இதில் தேர் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
விபத்து குறித்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி, மாவட்ட எஸ்.பி, ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து, நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம்’ அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும்.
வழக்கம் போல இந்தாண்டும் 94வது அப்பர் சதய விழா செவ்வாயன்று தொடங்கியது. 3 நாள் விழாவின் முக்கிய பகுதியாக’ செவ்வாய் இரவில் தேர் பவனி தொடங்கியது. களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது.
தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே இருந்த உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது. இதில் தேரில் மின்சாரம் பாய்ந்ததில், தேரை இழுத்து வந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர்.
தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்; இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் முழு விவரங்கள் தெரிய வரும். குறைந்த மின் அழுத்த பாதை ஏற்கெனவே அணைக்கப்பட்டிருந்தது. உயர் மின்னழுத்த பாதை மூலம் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார்.
இதற்கிடையே, தேரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“