தேர் விபத்தில் 11 பேர் பலி- அ.தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்தில் அப்பர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது தேர் பவனி நடத்தப்பட்ட நேரத்தில், தேரின் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்திருக்கிறோம்.

இந்த வேதனைக்குரிய சம்பவத்தில் மேலும் 15 பேர் தீக்காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருவதும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

ஆண்டுதோறும் நடைபெற்று வந்த ஓர் இனிய ஆன்மிக நிகழ்வில் களிமேடு கிராம மக்களுக்கு இவ்வாண்டு மாபெரும் துயரம் ஏற்பட்டிருப்பதை சொற்களால் விவரிக்க இயலாது. இந்த சோக சம்பவத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இத்தனை பெரிய துயரத்தை சந்தித்திருக்கும் களிமேடு கிராம மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் தமிழ்நாடு அரசு விரைந்தும், முழுமையாகவும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இந்த விபத்தில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள 11 பேர்களின் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும், அதே போல், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 பேர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.