நல்ல படம் இயக்க முடியாதது ஏன்? இளையராஜாவுக்கு அமீர் பதில்
புகழ்பெற்ற ஈரானிய திரைப்படமான ‛சில்ட்ரன் ஆப் ஹெவன்' படத்தை இயக்குனர் சாமி ‛அக்கா குருவி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பேச்சு திரையிடப்பட்டது. அதில் இளையராஜா “இன்றைக்குள்ள இயக்குனர்களுக்கு சிந்தனை இல்லை. உலகத் தரமான படங்கள் வெளிவருவதில்லை”. என்றார்.
இதற்கு பதிலளித்து இயக்குனர் அமீர் பேசியதாவது: சில்ட்ரன் ஆப் ஹெவன் உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்ட ஒரு திரைப்படம். மஜித் மஜிதி என்ற இயக்குனர் உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமாவையும் தன் காலடியில் கொண்டு வந்து புரட்சி செய்த ஒரு இயக்குனர்.
இளையராஜா இது போன்ற படங்களை ஏன் இங்கு எடுப்பதில்லை என்று ஒரு கேள்வியை கேட்டார். அதில் சில சிக்கல்கள் உள்ளது. இது போன்ற நிறைய திரைப்படங்கள் உள்ளது. அதை எல்லாம் இயக்க வேண்டுமென்றால், இயக்குனரே கதை, வசனம், திரைக்கதை, போன்று என்னவெல்லாம் உள்ளதோ அது அனைத்தையும் பார்ப்பவராக இருக்க வேண்டும். அப்போது தான் தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தர தயாராகவுள்ளனர்.
கதை வேறு ஒருவருடையது, இயக்கம் மட்டும் தான் நான் என்று சொன்னால், அதற்கு நான் எழுத்தாளரை வைத்தே இயக்கி விடுவோமே தனியாக இயக்குனர்கள் எதற்கு? என்பார்கள். இது போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளது. குறிப்பாக முதல் படம் இயக்கும் ஒரு இயக்குனருக்கு அந்த படம் வெற்றி அடைந்துவிட்டது என்று சொன்னால் அவர் அடுத்து எடுக்கும் படம் ரீமேக் படமாக இருந்தால் அதை யாரும் விரும்புவதில்லை.
இளையராஜா கேட்ட கேள்வி நியாயமான கேள்வி இது சாமிக்கு மட்டுமல்ல பல இயக்குனர்களுக்கும் தோன்றியிருக்கும் எனக்கும் தோன்றியது. பருத்திவீரன் என்ற சொந்த ஊர் கதையை இயக்கிவிட்டோம். ராம் என்று சொந்த கதையை இயக்கிவிட்டோம். அது போன்ற படத்தை இயக்கிவிட்டு ஒரு ரீமேக் கதையை இயக்குவதா? என்று வியாபார ரீதியாக பயம் வருகிறது. இதை இயக்கினால் மார்க்கெட் இறங்கிவிடுமோ? மக்கள் மத்தியில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கேள்விகள் எழுகின்றன.
இவ்வாறு அமீர் பேசினார்.