புதுடெல்லி: நாராயண குருவின் போதனைகளை பின்பற்றினால் உலகின் எந்த சக்தியாலும் இந்தியர்களிடம் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த ஆன்மிக தலைவர் நாராயண குரு கடந்த 1856-ம் ஆண்டு முதல் 1928-ம் ஆண்டு வரை வாழ்ந்தார். சாதி பாகுபாட்டுக்கு எதிராக தீவிரமாக போராடிய அவர் கடந்த 1903-ம்ஆண்டில் தர்ம சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். பின்னர் கேரளாவின் வற்கலை ஊரில் சிவகிரி மலை மீது மடத்தை ஏற்படுத்தினார். நாராயண குருவின் வழிகாட்டுதலின்படி பிரம்ம வித்யாலயா தொடங்கப்பட்டது.
கடந்த 1932-ம் ஆண்டில் சிவகிரிமலைக்கு முதல் புனித யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்த புனிதயாத்திரையின் 90-வது ஆண்டு மற்றும் பிரம்ம வித்யாலயாவின் பொன் விழா ஆண்டு ஆகியவைடெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:
வடக்கே காசி என்றால், தெற்கின் காசி என்று வற்கலை அழைக்கப்படுகிறது. இவை வெறும் புனிதத் தலங்களாவும், நம்பிக்கை மையங்களாக மட்டுமல்லாமல் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற எழுச்சியை ஏற்படுத்தும் புனித தலங்களாக உள்ளன.
இந்தியாவின் கலாச்சாரத்தை வளப்படுத்த நாராயண குரு மிக தீவிரமாக பாடுபட்டார். கல்வி, அறிவியலை வளர்த்தார். அதேநேரம் மதம், நம்பிக்கை, பாரம்பரியத்தின் புகழையும் அவர் உயர்த்தினார். தீமைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து உண்மையான நிலையை மக்கள் புரிந்து கொள்ள வைத்தார். சாதிய பாகுபாட்டுக்கு எதிராக போராடினார்.
நாராயண குருவின் வழிகாட்டுதலில் ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு சேவையாற்றி வருகிறது. பகுத்தறிவு சிந்தனைவாதியாகவும், நடைமுறை சீர்திருத்தவாதியாகவும் நாராயணகுரு திகழ்ந்தார். ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள் என்ற கொள்கையை அவர் முன்னிறுத்தினார். அவரது அழைப்பு தேச பக்தி, ஆன்மிக உணர்வை அதிகரிக்க செய்கிறது. நாராயண குருவின் போதனைகளை பின்பற்றினால் உலகின் எந்த சக்தியாலும் இந்தியர்களுக்குள் வேறுபாடுகள், பிரிவினையை ஏற்படுத்த முடியாது.
இப்போது 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகிறோம். நமது சுதந்திர போராட்ட தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள் காட்டிய பாதையில் நாடு நடைபோடுகிறது.
அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது வரும் 2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அப்போது நமது சாதனைகள் உலக அளவில் போற்றப்பட வேண்டும். அதற்கு நமது பார்வையும் உலகளாவியதாக இருக்க வேண்டும். நமது சாதனைகளால் உலகம் முழுவதும் கால் தடம் பதிக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.