கோத்தகிரி சாலையில் இரவு பகலாக உலாவிக் கொண்டிருக்கும் காட்டு யானைகளிடம், வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் மற்றும் பசுந்தீவனங்களைத் தேடி காட்டு யானைகள் மற்றும் காட்டெருமைகள் வெளியே வரத்தொடங்கியுள்ளன. இதன்காரணமாக கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையல், தற்போது இந்த சாலை மற்றும் சாலையை ஒட்டியுள்ள சோலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ஒற்றை யானையும், குட்டியுடன் கூடிய 3 யானைகளும் நடமாடி வருகின்றன. ஏற்கெனவே இந்த சாலையில் குட்டியுடன் வந்த ஒற்றை யானை பேருந்து மற்றும் வாகனங்களில் கண்ணாடியை சேதப்படுத்தியது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரியில் தற்போது சீசன் நடைபெற்று வருவதால் அதிக அளவிலான வாகனங்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வந்து செல்வதால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன், இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் வரை வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM