புதுடில்லி : ‘தற்போது அதிகப் பயன்பாட்டில் இல்லாத, தேவையில்லாத பணியிடங்களை ஒப்படைக்க வேண்டும். அதில் பணியாற்றும் ஊழியர்களை காலியாக உள்ள மாற்று பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்’ என, ரயில்வே வாரியம் கூறியுள்ளது.
ரயில்வே வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவரான வி.கே. திரிபாதி, அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாறி வரும் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் இதர காரணங்களால், சில பணியிடங்கள் தற்போதைக்கு தேவையில்லை. இதுபோன்ற பணியிடங்களை அடையாளம் காண வேண்டும். இதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை மண்டலங்களில் உருவாக்க வேண்டும்.தற்போது ரயில்வேயின் செலவில், 67 சவீதம், ஊழியர்களின் சம்பளத்துக்காக செலவிடப்படுகிறது.
ஒரு பக்கம் தேவையில்லாத பணியிடங்களில் ஆட்கள் இருப்பது, அதே நேரத்தில் தேவைப்படும் பணியிடங்கள் காலியாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.தேவையில்லாத பணியிடங்களை அடையாளம் கண்டு, அவற்றை ஒப்படைக்க வேண்டும். அதில் பணியாற்றும் ஊழியர்களை, மாற்றுப் பணியில் அமர்த்திட வேண்டும்.
சில பணிகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை, ‘அவுட்சோர்சிங்’ என்ற முறையில் ஒப்பந்த அடிப்படையில் நியமித்து கொள்ளலாம். ஊழியர்களின் முழு திறமையையும் பயன்படுத்தி கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement