கொழும்பு :
இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி 17-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்தநிலையில், கொழும்பில் ஆளும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின் ராஜபக்சே கூறியதாவது:-
எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதையும், வரிசையில் நிற்கும் முறையையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
விரைவில் மக்கள் வரிசைகளில் நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும்.
இந்தப் பொறுப்புகளை இன்னொருவர் நிறைவேற்றும் வரை காத்திருப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளின் அளவை தாம் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். இந்த இக்கட்டான நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும், தான் இருக்கிறேன் என்பதை உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும்.
இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியது ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர் மகிந்த ராஜபக்சே தான் பதவி விலக போவதில்லை என்றும் அது குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.