பதிலடிக்கு பதிலடி – இந்தி மொழியை வைத்து ட்விட்டரில் பிரபல நடிகர்கள் வாக்குவாதம்!

பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப், இந்தி தேசிய மொழி அல்ல என்றும், பாலிவுட் நடிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தங்களது படங்களை டப் செய்து வெற்றிபெற திணறுகிறார்கள் என்றும் தெரிவித்த நிலையில், அதற்கு அஜய் தேவ்கன் பதிலளிக்க, மீண்டும் அதற்கு கிச்சா சுதீப் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக தென்னிந்திய மொழிகளில் உருவாகி வரும் திரைப்படங்கள், இந்தியிலும், உலக அளவிலும் கவனத்தை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சாதனை புரிந்து வருகின்றன. குறிப்பாக, ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘புஷ்பா’, ‘கே.ஜி.எஃப். 2’ உள்ளிட்ட படங்கள் இந்தியில் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. இந்தியில் மட்டுமே இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியான சில நாட்களிலேயே 100 கோடி வசூலை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகின்றன.

image

இதனால், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்கள் அதிகளவில் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கன்னட நடிகர் கிச்சா சுதீப்பிற்கும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கும் இடையில் ட்விட்டரில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கன்னட நடிகர் கிச்சா சுதீப், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ‘R: The Deadliest Gangster Ever’ என்ற திரைப்பட துவக்க விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் கன்னட படமான ‘கேஜிஎஃப்’ பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் பேசிய போது, “பான் இந்தியா படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டதாக சொல்கிறீர்கள். நான் ஒரு சிறிய திருத்தம் செய்ய விரும்புகிறேன்.

இந்தி இனி தேசிய மொழி இல்லை. பாலிவுட் நடிகர்கள் இன்று பான் இந்தியா படங்களில் நடிக்கிறார்கள். அவர்கள், தங்களது படங்களை தெலுங்கு மற்றும் தமிழில் டப்பிங் செய்து வெற்றியைக் காண போராடுகிறார்கள், அது நடக்கவில்லை. ஆனால் நாம், இங்கு எங்கும் வேண்டுமானாலும் செல்லும் படங்களைத் தயாரித்து வருகிறோம்” என தெரிவித்திருந்தார்.

image

இதையடுத்து, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் கிச்சா சுதீப்பை டேக் செய்து, பதிவின் மூலம் அவரது கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார். அந்த பதிவு முழுவதையும் இந்தியிலேயே பதிவிட்டுள்ளார். அதில், “சகோதரரே, உங்கள் கருத்துப்படி இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால், உங்கள் தாய்மொழிப் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறீர்கள்?

இந்தி தான் நமது தாய் மொழி. நமது தேசிய மொழி. எப்போதும் அதுதான் மொழியாக இருக்கும். ஜன கன மன” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு கிச்சா சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

image

image

அதில், “நீங்கள் இந்தியில் அனுப்பிய உரை எனக்குப் புரிந்தது. நாங்கள் அனைவரும் இந்தியை மதித்து, நேசித்து, கற்றுக்கொண்டோம்.
குற்றமில்லை சார்,,, ஆனால் எனது பதிலை கன்னடத்தில் தட்டச்சு செய்தால், உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன்.!!
நாங்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்லவா சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அஜய் தேவ்கன், “நீங்கள் ஒரு நண்பர். தவறான புரிதலை நீக்கியதற்கு நன்றி. நான் எப்போதுமே சினிமா துறையை ஒன்றாகத்தான் நினைத்தேன். நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், எங்கள் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை, மொழிபெயர்ப்பில் ஏதாவது தவறுகள் நிகழ்ந்திருக்கலாம்” என்று கூறினார். இவர்களின் இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.