புதுடெல்லி: நாடு முழுவதும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 10.69 லட்சம் குற்றவாளிகளின் முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய குற்றங்களை விசாரிக்க அவற்றை விசாரணை அமைப்புகள் எந்த நேரத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் காண கடந்த 2018ம் ஆண்டு இன்டர் ஆப்பரேபிள் கிரிமினல் ஜஸ்டிஸ் சிஸ்டம் (ஐசிஜேஎஸ்) என்ற தளம் உருவாக்கப்பட்டது. இதில், நாடு முழுவதும் பாலியல் குற்றவாளிகளின் தேசிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. பலாத்காரம், கூட்டு பலாத்காரம், பெண்களை துன்புறுத்துதல் மற்றும் குழந்தைகள் பலாத்காரம் (போக்சோ) உள்ளிட்ட சட்ட விதிகளின் கீழ் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.இந்த தேசிய தகவல் அமைப்பில் குற்றவாளிகளின் பெயர், முகவரி, புகைப்படம், அடையாள அட்டைகள், கை ரேகை போன்ற விவரங்கள் இருக்கும். புதிய குற்றங்களை விசாரிக்கும் போது, இந்த தகவல் தளத்தை விசாரணை அமைப்புகள் அணுக முடியும். இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பாலியல் குற்றவாளிகள் தேசிய தகவல் தளத்தில் 10.69 லட்சம் குற்றவாளிகளின் தகவல்கள் சேரிக்கப்பட்டுள்ளன. இது அனைத்து விசாரணை அமைப்புகளுக்கு எந்த நேரத்திலும் கிடைக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம், பாலியல் வழக்குகளில் விரைவில் துப்பு துலக்க முடியும்’’ என கூறப்பட்டுள்ளது. குற்றவியல் திருத்த சட்டம் 2018ன் படி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில், எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதில் இருந்து 2 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.