PM Kisan 11th installment, PM Kisan status Check 2022: பிஎம் கிசான் திட்டத்தின் நிதியுதவியை சிக்கலில் இன்றி தொடர்ந்து பெற இ-கேஒய்சி செயல்முறையை முடிப்பது அவசியமாகும். இந்த இ-கேஒய்சி செயல்முறையை வீட்டிலிருந்தே எவ்வாறு செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
விவசாயி பெருங்குடிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் பிஎம் கிசான் நிதியுதவி திட்டம். இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ஆண்டுக்கு ரூ.6000 அனுப்பப்படுகிறது. இந்தத் தொகை தலா ரூ2000 என மூன்று தவணைகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.
இதுவரை, இந்த திட்டத்தின் மூலம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பிரதமர் கிசானின் 11வது தவணைக்காக விவசாய பயனாளி காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில், பிஎம் கிசான் திட்டத்தில் நிதியுதவி பெற இ-கேஒய்சி செயல்முறையைச் செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இ-கேஒய்சி செயல்முறையை முடிப்பதற்கான கடைசி தேதி மே 31.
விவசாய பயனாளிகள் இந்த இ-கேஒய்சி செயல்முறையை வீட்டிலிருந்தே செய்யலாம். ஆம், நீங்கள் பிஎம் கிசானில் இ-கேஒய்சி ஐ செய்ய ஆதார் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.
இ-கேஒய்சி செயல்முறையை வீட்டிலிருந்தே செய்வது எப்படி?
படி 1: முதலில் உங்கள் மொபைல் அல்லது கணினி மூலம் பிஎம் கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் (pmkisan.gov.in) செல்லவும். அங்கே இ-கேஒய்சி இன் இணைப்பு வலது பக்கத்தில் காணப்படும்.
படி 2: இணைப்பை கிளிக் செய்த பின், உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு தேடல் பொத்தானைத் தட்டவும்.
படி 3: இப்போது உங்கள் மொபைலைக்கு 4 இலக்க ஓடிபி வரும். அதனை கொடுக்கப்பட்ட பெட்டியில் டைப் செய்யவும்.
படி 4: மீண்டும் ஆதார் அங்கீகாரத்திற்கான பொத்தானை கிளிக் செய்யுமாறு கேட்கப்படுவீர்கள். அதைத் கிளிக் செய்யவும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் மற்றொரு 6 இலக்க ஓடிபி வரும். அதை நிரப்பி சமர்ப்பி என்பதைத் கிளிக் செய்யவும்.
இதையும் படியுங்கள்: மே மாதத்தில் 10 நாட்கள் வங்கி செயல்படாது; எந்தெந்த நாட்கள் தெரியுமா?
படி 5: இதற்குப் பிறகு உங்கள் இ-கேஒய்சி வெற்றிகரமாக முடிக்கப்படும் அல்லது தவறானது என்று காணப்படும். தவறானது என காண்பிக்கப்பட்டால், ஆதார் சேவை மையத்திற்குச் சென்று சரி செய்து கொள்ளலாம். இ-கேஒய்சி ஏற்கனவே முடிந்துவிட்டால், இ-கேஒய்சி ஏற்கனவே முடிந்துவிட்டது என்ற செய்தி திரையில் காட்டப்படும்.
இதற்கிடையில் தற்போது, மே 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சமூக தணிக்கை அரசால் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தணிக்கையில், தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் பற்றிய தகவல்கள் கிராம சபை மூலம் சேகரிக்கப்படும். அதன் பிறகு, பட்டியலில் இருந்து தகுதியற்றவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, தகுதியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும்.
அடுத்ததாக, மத்திய அரசின் இந்த திட்டத்தில் மாநிலங்களின் ஒப்புதலும் அவசியமாகும். சில மாநில அரசுகள் 11 ஆவது தவணைக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. பிஎம் கிசான் போர்ட்டலில் உள்ள நிலையைச் சரிபார்த்தபோது, மாநிலத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டால், உங்கள் தவணைக்கான ஒப்புதல் மாநில அரசிடமிருந்து வரவில்லை என்று அர்த்தமாகும்.