டெல்லி: உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடியை விடுவிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர்; உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடியை விடுவிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. டி.ஏ.பி. உரங்களுக்கான மானியம் ரூ.1,650 லிருந்து ரூ.2,501-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2020-21-ஆம் ஆண்டில் ரூ.512 ஆக இருந்த டி.ஏ.பி. உர மானியம், 2021-22-ல் ரூ.1,650 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.2,501-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து அடிப்படையிலான உர மானிய திட்டத்தை நடப்பு பருவத்திரும் நீடிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் ரூ.4,526 கோடியில் 540 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. நக்சல் பாதிப்புள்ள இடங்களில் 2ஜி சேவையில் இருந்து 4ஜி சேவை வழங்க ரூ.1,884 கோடியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிறு வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வநிதி கடனுதவி திட்டத்தை 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரூ.820 கோடி நிதி உதவி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் ‘பிரதான் மந்திரி சவான் நிதித் திட்டம், 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தொடர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தொழிலை இழந்த தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை கடன் உதவி பெற இந்த திட்டம் வகை செய்யும். அஞ்சலக வங்கி சேவை திட்டத்திற்கு கூடுதலாக 828 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது இவ்வாறு கூறினார்.