பெண் குழந்தைகள் பிறப்பதை இன்றும் கூட பல குடும்பங்கள் விருப்பத்துடன் வரவேற்பதில்லை. இந்நிலையில், புனேயில் விவசாயி ஒருவர், பிறந்த தன் பேத்தியையும், மருமகளையும் மருத்துவனையிலிருந்து ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளது, பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
புனே புறநகர் பகுதியான பாலேவாடி என்ற இடத்தை சேர்ந்தவர் விவசாயி அஜித் பாண்டுரங்க். இவரின் மருமகளை சமீபத்தில் பிரசவத்துக்காக புனே மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. பேத்தி பிறந்ததில் பாண்டுரங்க் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தன் பேத்தியின் வரவை மிகவும் விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று விரும்பினார்.
இதையடுத்து, மருத்துவமனையிலிருந்து பேத்தியை ஹெலிகாப்டரில் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். இதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து, பாண்டுரங்க் மருமகள், பேத்தி உள்ளிட்ட சிலர் மட்டும் அதில் வீட்டுக்குச் சென்று இறங்கினர்.
பேத்தி ஊரில் வந்து இறங்கியதும், பட்டாசு வெடித்து அமர்க்களப்படுத்தினார் பாண்டுரங்க். உறவினர்கள் அனைவரும் கூடி நின்று குழந்தையை வரவேற்றனர். அவர்கள் வீடு இருக்கும் தெரு முழுக்க அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பேத்தியும் மருமகளும் வீட்டுக்குள் நுழையும்போதும் பட்டாசு, வானவேடிக்கைகள் அமர்க்களப்பட்டன.
நிகழ்ச்சிக்கு உறவினர்கள் அனைவரையும் அழைத்திருந்த பாண்டுரங்க், தன் பேத்திக்கு ருஷிகா என்று பெயரிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.