பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி- புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேற்றம்

மும்பை,
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் புனேயில் இன்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர் படிக்கல் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் நோக்கி நடையை கட்ட, நடப்பு ஐபிஎல் தொடரில் 3 சதங்கள் அடித்து ஆரஞ்சு நிற தொப்பியை வைத்துள்ள பட்லர் இந்த போட்டியில் 8 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
அவரை தொடர்ந்து ராஜஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் சரிவை நோக்கி சென்றது. சிறப்பாக பந்துவீசிய பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இருப்பினும் இறுதியில் ரியான்  பராக் சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில்  ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு  144 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து பட்டித்தார் களமிறங்கினார். குல்தீப் சென் வீசிய 7-வது ஓவரில் டு பிளேசிஸ் 23 ரன்களில் பட்லர்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் முதல் பந்திலே அதே ஓவரில் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து வந்த பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்ப, பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்பு வெகுவாக குறைந்தது.
பின்வரிசையில் வந்த ஹசராங்கா 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களூரு அணி 19.3 ஓவர்கள் முடிவில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது
இதனால் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.