பெங்களூரு:கர்நாடக உள்துறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ள மாநில அரசு, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்தை மாற்ற முடிவு செய்துள்ளது. ரம்ஜான் பண்டிகைக்கு பின், கமிஷனர் மாற்றப்பட வாய்ப்புள்ளது.
அரசு முடிவு
பாஸ்கர் ராவுக்கு பின், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற கமல் பந்த், எந்த குற்றச்சாட்டுகள், சர்ச்சைக்கும் ஆளாகாமல், 20 மாதங்கள் பணியாற்றியும், இவரை இடம் மாற்றி, வேறொருவரை இப்பதவியில் அமர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் ஜெ.சி.நகரில், சந்துரு கொலை வழக்கில் உருது பேசவில்லை என்பதற்காக, அவர் கொலை செய்யப்பட்டதாக, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ஊடகங்களிடம் கூறினார். ஆனால், போலீஸ் கமிஷனர் கமல்பந்த், பைக் மோதிய விஷயத்தில் தகராறு ஏற்பட்டு சந்துரு கொலையானதாக கூறினார்.
அதிருப்தி
இதனால் உள்துறை அமைச்சரும், அரசும் தர்ம சங்கடத்துக்கு ஆளாகினர். கமிஷனர் கமல்பந்த் மீது, பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்ததுடன், அவரை மாற்றும்படி நெருக்கடி கொடுக்கின்றனர். இதையடுத்து, அரசும் கமிஷனரை மாற்ற முன்வந்துள்ளது. ரம்ஜான் பண்டிகைக்கு பின், பெங்களூரு நகருக்கு புதிய போலீஸ் கமிஷனர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
இப்பதவிக்கு கே.எஸ்.ஆர்.பி., – ஏ.டி.ஜி.பி., அலோக்குமார், உளவுத்துறை முக்கியஸ்தர் தயானந்த், சி.ஐ.டி., – ஏ.டி.ஜி.பி., உமேஷ்குமார், உள்கட்ட பாதுகாப்பு பிரிவு முக்கியஸ்தர் அருண் சக்ரவர்த்தி, சட்டம் – -ஒழுங்குப் பிரிவு ஏ.டி.ஜி.பி., பிரதாப் ரெட்டி பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
இதில் அலோக்குமார், தயானந்த் பெயர்கள் முன்னணியில் உள்ளன. இருவரும் நேர்மையான அதிகாரிகள்; நல்ல பெயரை சம்பாதித்துள்ளனர். எனவே, இவர்களில் ஒருவர் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக அமரக்கூடும்.
Advertisement