புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான வரியை சில மாநிலங்கள் குறைக்காமல் பொதுமக்களுக்கு அநீதி இழைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: போர் சூழல் அதிகரித்துள்ளதால் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளாவிய நெருக்கடி பல சவால்களை கொண்டு வருகின்றது. இதுபோன்ற நேரத்தில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் ஒருங்கிணைப்பு உணர்வை மேலும் மேம்படுத்துவது கட்டாயமாகி விட்டது. பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மீது ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசானது கடந்த ஆண்டு நவம்பரிலேயே எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்து விட்டது. மாநிலங்கள் வரியை குறைக்குமாறும், பலனை பொதுமக்களுக்கு மாற்றும்படியும் வலியுறுத்தப்பட்டன. சில மாநிலங்கள் வரியை குறைத்தன. ஆனால், சில மாநிலங்கள் வரி குறைப்பினால் ஏற்பட்ட பலனை மக்களுக்கு தரவில்லை. இதனால், இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இது அந்த மாநில மக்களுக்கு மட்டும் இழைக்கப்படும் அநீதி அல்ல; அண்டை மாநில மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக அல்லது ஒன்றிய அரசின் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை. வரியை குறைக்கவில்லை. இதனால், அந்த மாநில மக்கள் பெட்ரோல், டீசல் விலையுயர்வு சுமைக்கு ஆளாகின்றனர். மாநிலங்களுக்கு நவம்பரில் என்ன வரி குறைக்கப்பட்டதோ அதன் பலனை பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில், வாட் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.